சென்னை: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டிருக்கும் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் பங்கேற்க மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்றிரவு டெல்லி செல்லவுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய அளவில் கட்சியை பலப்படுத்தவும், தொண்டர்களை உற்சாகமடையச் செய்யவும் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கடந்த செப்டம்பர் மாதம் முதல் மேற்கொண்டு வருகிறார்.
கன்னியாகுமரியின் காந்தி மண்டபம் நுழைவுவாயிலில் இருந்து இந்த பயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் பங்கேற்க வருமாறு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதை ஏற்று கமல்ஹாசன் இன்றிரவு விமானம் மூலம் டெல்லி செல்லவுள்ளார்.
தொடர்ந்து நாளை (டிச.24) டெல்லியில் நடைபெறும் பயணத்தில் ராகுலுடன் இணையவுள்ளார். அப்போது கமல்ஹாசனோடு மாநில நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொள்கின்றனர்.