விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை… அமைச்சர் சொன்ன அப்டேட்!

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது:

உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் அதை தடுக்கும் நடவடிக்கைகளை எடுப்பதற்கான மருந்து கையிருப்பு, படுக்கைகள், ஆக்சிஜன் கையிருப்பு போன்றவற்றை ஆய் வு செய்யபட்டுள்ளன. வெளிநாடுகளில் குறிப்பாக அமெரிக்கா, சீனா, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளில் அதிகரித்து கொண்டு இருக்கிற காரணத்தினால் அந்த நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு ஏதாவது அறிகுறி தென்பட்டால் அவர்களுக்கு RTPCR பரிசோதனை செய்திட அறிவுறுத்தபட்டுள்ளது.

குறிப்பாக ஜப்பான், சீனா, ஹாங்காங் போன்ற நாடுகளிலிருந்து வருபவர்களை ரேண்டமாக 2% ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்படும். தமிழகத்தில் ஏற்கனவே அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களிலும் சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகளோடு வந்தால் அவர்களையும் பரிசோதனை செய்யப்பட இருக்கிறது.

குறிப்பாக, கோவை, மதுரை திருச்சி, சென்னை போன்ற பன்னாட்டு விமான நிலையங்களில் இன்று முதல் பரிசோதனை மையங்கள் அமைக்கப்படும்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எதுவும் ஏற்பட்டால் ஆறு மாதத்திற்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் இருக்கிறது. கொரோனாவிற்கு என்று ஏற்கெனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த படுக்கைகள் அனைத்தும் தயாராக உள்ளன.

கடந்து அலையின்போது தமிழக முதல்வர் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட படுக்கைகளை கூடுதலாக, தமிழகத்துக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்தார்கள். அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கான படுக்கைகள், குழந்தைகளுக்கான படுக்கைகள் தமிழ்நாடு முழுவதிலும் உள்ளன.

ஆக்சிஜனை கையிருப்பில் வைத்துக் கொள்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் குறிப்பாக, ஜெனரேட்டர், சிலிண்டர் போன்ற அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் இருக்கின்றன.

எனவே மக்கள் பெரிய அளவில் அச்சப்பட வேண்டியதில்லை, தடுப்பூசி போடும் பணி முதல் தவணை 96 சதவீகிதம், இரண்டாவது தவணை 92 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாகவும், எனவே ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு முழுவதும் இருக்கிற மக்களுக்கு 90 சதவீதத்துக்கு மேல் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்ச்சியாக இருந்து கொண்டிருக்கிறது.

இந்தியா முழுவதும் கடந்த ஆறு மாதங்களாக பெரிய அளவில் பாதிப்பு இல்லை. மேலும் ஆங்காங்கே ஒவ்வொரு நாளும் 40, 50 பேர் மரணம் அடைந்து கொண்டிருந்தாலும் தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 6 மாத காலமாக இழப்பு ஏதும் இல்லாத நிலை என்பது தொடர்ச்சியாக நிலைத்து கொண்டிருக்கிறது.

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தமிழகத்தில் சிங்கிள் டிஜிட் என்கின்ற வகையில் 6, 7, 8 என்கிற வகையிலே தான் பாதிப்பும் வந்துகொண்டிருக்கிறது.

மேலும், நேற்று பரிசோதனை செய்யப்பட்டதில் 6 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு இருக்கிறது, எனவே மிக பாதுகாப்பான நிலையில் தமிழகம் உள்ளது.

மேலும், மக்கள் அதிகமாக கூடுகிற இடங்களில் பாதுகாப்புக்காக முகக் கவசங்கள் அணிவதும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது மாதிரியான விதிமுறைகளை தொடர்ந்து கடைப்பிடித்தால் நல்லது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.