போக்குவரத்து விதிமீறல் புதிய அபராத தொகையானது கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருக்கிறது. அதன்படி புதிய அபராத தொகையானது 10,000 ரூபாயிலிருந்து வசூலிக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து விதிமீறல்கள் குறைந்தபடி இருக்கின்றன. குறிப்பாக மது அருந்துபவர்களுடன் வாகனத்தில் பயணித்தால் அபராதம், பின்னால் அமர்ந்திருப்பவர்களும் ஹெல்மெட் அவசியம் போன்ற விதிமுறைகளால் பின்னால் அமர்ந்து செல்லும் நபரும் ஹெல்மெட் அணிந்து செல்வது அதிகரித்து வருகிறது.
அதேசமயம், காவல் துறையினர் பலர் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் செல்வது அதிகரித்துவருகிறது. இதுகுறித்த புகைப்படங்களும் வெளியான வண்ணம் இருக்கின்றனர்.
இந்நிலையில் டிஜிபி சைலேந்திரபாபு பிறப்பித்திருக்கும் உத்தரவில், “ஹெல்மெட் அணியாமல், இருசக்கர வாகனத்தில் செல்லும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டிய காவல் துறையினரே ஹெல்மெட் அணியாமல் செல்லக்கூடாது. ஹெல்மெட் அணியாமல் வரும் போலீசாரின் இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்
வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் போலீசார் அதற்குண்டான அபராதம் கட்டி, ஹெல்மெட் வாங்கி வந்து காண்பித்த பின்தான், வாகனத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
குறிப்பாக தான் போலீஸ் என்ற அடையாளத்தை காரணமாக கூறி அபராதம் விதிக்கும் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டாலோ அல்லது வாக்குவாதத்தில் ஈடுபட்டாலோ அந்த போலீசார் மீது வழக்குப்பதிந்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளார்.