ம.தி.மு.க. விருதுநகர் மேற்கு, கிழக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் சிவகாசியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட அக்கட்சியின் தலைமைக்கழக செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், “ம.தி.மு.க.வில் கடந்த 4 மாதங்களாக உறுப்பினர் சேர்ப்பு பணி நடைபெற்றது. இதன்மூலம் 30 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அடுத்துவரும் நாள்களில் கட்சியின் அமைப்புத்தேர்தல் நடக்க உள்ளது. கட்சி வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து விவாதித்தோம். இந்த மாவட்டத்தின் முக்கிய தொழிலான பட்டாசு, தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பட்டாசு ஆலைகளில் விபத்து ஏற்படும்போது அதன் உரிமையாளர்களை கைது செய்வதை தவிர்க்க வேண்டும்.

2024ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலின்போது விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இதில் தனிப்பட்ட முறையில் எனக்கு விருப்பம் இல்லை. கட்சியின் தலைவர் வைகோ, மூத்த நிர்வாகிகள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன். அதே நேரத்தில் தி.மு.க. கூட்டணியில் தற்போது இருப்பதால் கூட்டணி கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அதற்கான வாய்ப்பை வழங்கினால் போட்டியிடுவேன்.
இந்த நாடாளுமன்ற தொகுதியில் ம.தி.மு.க. 3 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. இந்தத்தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தால் இத்தொகுதியில் உள்ள பிரச்னைகளை சரி செய்ய முயற்சிசெய்வேன்.

விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசு தான் முக்கிய காரணம். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து பொருள்களின் விலையும் உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தபோதும்கூட இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்கவில்லை” என்றார்.