புதுடெல்லி: டெல்லியில் ஒன்றிய அமைச்சர்கள் 3 பேரை தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நேற்று சந்தித்தார். டெல்லி சென்ற தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று அடுத்தடுத்து மூன்று ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தினார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
மூன்று ஒன்றிய அமைச்சர்களை சந்தித்தேன். தமிழகத்தை பொருத்தமட்டில் பல நாடுகளில் இருந்து பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய தயாராகி வரும் நிலையில் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து ஆலோசனை நடத்தினேன். அதில் பல முக்கிய அம்சங்கள் உள்ளது. இரண்டாவதாக ஒன்றிய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்தேன். அப்போது தமிழகம் தொடர்பான பல புதிய திட்டங்கள் குறித்து ஆலோசித்தார்.
மூன்றாவதாக ஒன்றிய ஸ்டீல் மற்றும் விமானத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவை சந்தித்தேன். அப்போது, மதுரை விமான நிலையத்துக்கு சர்வதேச அந்தஸ்து வழங்க கேட்டுக் கொண்டேன். பரந்தூர் விமான நிலையத்தை பொருத்தமட்டில், அதற்கான விண்ணப்பங்கள் மற்றும் தமிழக அரசின் ஆவணங்கள் கிடைக்க பெற்றுள்ளது. அதனை விரைந்து முடித்து தருகிறோம் என ஒன்றிய அமைச்சரே தாமாக முன்வந்து தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.