Hanuman Jayanti : 1,00,008 வடை மாலைகளுடன் நாமக்கல் ஆஞ்சநேயர் – கடும் பனியிலும் பக்தர்கள் தரிசனம்

Hanuman Jayanti : மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தில் அமாவாசை அன்று ஆஞ்சநேயர் அவதரித்தார் என்று கருதப்படுகிறது. இந்த நாள், ஆஞ்சநேயர் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, நாமக்கல் நகரில் மையப்பகுதியில் வீற்றிருக்கும் 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு இன்று (டிச. 23) அதிகாலை 5 மணிக்கு 1,00,008 வடை மாலை அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், இந்த அலங்காரத்துடன் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

காலை 10 மணி வரை வடை மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஆஞ்சநேயருக்கு, பின்னர் மஞ்சள், சந்தனம், பன்னீர்,தயிர்,பால்,தேன்,திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட உள்ளது. இதனையடுத்து பிற்பகல் 1 மணிக்கு ஜொலி ஜொலிக்கும் தங்க கவச அலங்காரத்தில் ஆஞ்சநேய சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயர் சுவாமியை தரிசித்து வருகின்றனர். மார்கழி மாதம் பனியினையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். 

இரவு 10 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆஞ்சநேயருக்கு சாத்தப்பட்ட வடை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது. ஜெயந்தி விழாவையொட்டி ஆஞ்சநேயர் சன்னதி முழுவதும் 2 டன் எடையுள்ள பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. நடப்பாண்டில் 2ஆவது ஜெயந்தி விழா என்பது குறிப்பிடத்தக்கது.

நாமக்கல் மட்டுமின்றி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆஞ்சநேயர் ஜெயந்தி சிறப்பு பூஜைகள், தரிசனங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இதனால், வைணவ தளங்கள் நோக்கி காலை முதலே பக்தர்கள் அணிவகுக்க தொடங்கியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.