சென்னை: “அதிமுகவை தன்வசமாக்க நினைக்கும் துரோகிகளை வீழ்த்துவோம்” என்று எம்ஜிஆர் நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் 35-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் தலைமையில் தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
“தொண்டர்கள் இயக்கமான அதிமுகவை தன்வசமாக்க நினைக்கும் துரோகிகளை வீழ்த்துவோம். சட்டவிரோத பொதுக்குழு மூலம் குறுக்குவழியில் அதிமுகவை அபகரிக்கும் முயற்சியை வீழ்த்துவோம்” என்று ஓ.பன்னீர்செல்வமு, அவரது தொண்டர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் நினைவு தினத்தையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள், பன்னீர்செல்வம் தரப்பினர், சசிகலா தரப்பினர், டிடிவி.தினகரன் தரப்பினர் என பல்வேறு தரப்பினரின் அடுத்தடுத்து வருகையையொட்டி இவர்களுக்குள் மோதல் ஏற்படால் இருக்க, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.