பெரியபாளையம்: திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே அத்திவாக்கம் ஊராட்சியில் 1200க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு 410 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இந்த ஊராட்சியில் கடந்த 2013ம் ஆண்டு கட்டப்பட்ட கட்டிடத்தில் ரேஷன் கடை இயங்கி வந்தது. இந்த கட்டிடம் தற்போது பழுதாகி மேற்கூரை விரிசல்களின் வழியாக மழைநீர் புகுவதால் உணவு பொருட்கள் சேதமாகிவந்தன. கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அங்குள்ள இ-சேவை மைய கட்டிடத்துக்கு ரேஷன் கடை மாற்றப்பட்டது.
இ-சேவை மைய கட்டிடத்தில் மக்களுக்கு தேவையான ரேஷன் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுவதால், அங்கு ஏற்கெனவே இயங்கி வரும் இ-சேவை மையப் பணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. கட்டிடம் மிகவும் குறுகலாகவும், ஒரு வழி பாதையாகவும் உள்ளது. இதுதவிர, அது பழைய கட்டிடம் என்பதால் ஆங்காங்கே பழுதாகி விரிசல்கள் காணப்படுகின்றன. இதனால் அங்கு அத்தியாவசிய உணவு பொருட்களை வாங்க ரேஷன் கடைக்கு மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, அத்திவாக்கம் ஊராட்சியில் பழுதான ரேஷன் கடை கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு, அங்கு புதிய கட்டிடத்தை உடனடியாக கட்டி தருவதற்கு மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்துகின்றனர்.