
ஆஸ்கர் ரேஸில் பங்கேற்கும் இந்திய குறும்படங்கள்
ஆஸ்கர் விருது இறுதி சுற்றுக்கான பரிந்துரை பட்டியலில் அசல் பாடல் பிரிவில் 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம்பெற்ற 'நாட்டு கூத்து' பாடலும், சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் குஜராத்தி மொழியில் வெளியான 'செல்லோ ஷோ' படமும் தேர்வாகியுள்ளன.
இவை தவிர, 'ஆல் தட் ப்ரீத்ஸ்' ஆவணப்பட பிரிவிலும், 'தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்' ஆவண குறும்படப் பிரிவிலும் தேர்வாகியுள்ளதாக ஆஸ்கர் கமிட்டி அறிவித்துள்ளது.
இதில் 'தி எலிபெண்ட் விஸ்பரஸ்' குறும்படத்தை கார்த்திசி கோன்சலஸ் இயக்கி உள்ளார். முதுமலை காப்பகத்தில் உள்ள தெப்பங்காடு என்ற கிராமத்தில் மின்வேலியில் சிக்கிய 3 மாத யானை குட்டியையும், காட்டில் தனித்து விடப்பட்ட அம்மு என்கிற யானை குட்டியையும் வளர்த்து ஆளாக்கும் பொம்மன், பெல்லி தம்பதிகளின் கதை.
'ஆல் தட் ப்ரீத்ஸ்' டாக்குமெண்டரி படம் டில்லியில் மக்கள் நெருக்கம் மிகுந்த வாழ்க்கையில் சரியான உணவும், தூய காற்றும் கிடைக்காத காக்கா, குருவி உள்ளிட்ட சிறு பறவைகளை காப்பாற்றும் இரு சகோதர்களை பற்றியது. இதனை சவுனக் சன் இயக்கி உள்ளார்.
95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்தாண்டு மார்ச் 12-ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இறுதிப் பரிந்துரைகள் வரும் ஜனவரி 24ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.