இந்திய குடிமைப் பணி: ஐஏஎஸ் தேர்வு பயிற்சி மையம் சார்பில் மாதிரி ஆளுமை தேர்வுக்கு பயிற்சி

சென்னை: அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வுப் பயிற்சி மையத்தால் வரும் 2, 3ம் தேதிகளில் மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், மத்திய தேர்வாணையம் செப்டம்பர் 2022ல் நடத்திய முதன்மைத் தேர்வுகளின் இறுதி முடிவு கடந்த 6ம் தேதி வெளியிடப்பட்டது. இப்பயிற்சி மையத்தில் தங்கிப் பயின்ற 18 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். இவர்கள் டெல்லியில் ஆளுமைத் தேர்வை எதிர்கொள்ள உள்ளனர். முதன்மை தேர்விலும் ஆளுமைத் தேர்விலும் பெறும் மொத்த மதிப்பெண்களை கணக்கிட்டு வெற்றி வரிசை தீர்மானிக்கப்பட உள்ளது.

இந்த மையத்தில் பயின்று வெற்றி பெற்ற தேர்வர்களுக்கு மட்டுமல்லாமல், முதன்மை தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சார்ந்த அனைத்து தேர்வர்களுக்கும் மாதிரி ஆளுமைத்தேர்வை இந்த மையம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்த முறையும் முதன்மைத் தேர்வில் தகுதி பெற்ற அனைத்துத் தேர்வர்களுக்கும் மாதிரி ஆளுமைத்தேர்வு நடத்தப்பட உள்ளது.

இந்த மாதிரி ஆளுமைத் தேர்வு வரும் 2ம் தேதி திங்கட்கிழமை அன்றும், 3ம் தேதி செவ்வாய்கிழமை அன்றும் இரு நாட்கள் நடத்தப்பட உள்ளது. ஆளுமைத் தேர்வில் கலந்து கொள்வதற்கு ஊக்கத்தொகையாக ரூ.5000 வழங்கப்படும். இது தொடர்பான விவரங்களை www.civilservicecoaching.com என்ற இணைய தளத்தில் காணலாம். ஆகவே, முதன்மைத் தேர்வு வெற்றியாளர்கள் தங்களது புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பப் படிவத்தை பயிற்சி மைய முதல்வருக்கு [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது விரைவு அஞ்சல் மூலமாகவோ வரும் 29ம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.