இரண்டு திருமணங்கள் தோல்வி, மூன்றாவதாக வந்து நிற்கும் நபர்; ஏற்பதா, மறுப்பதா? #PennDiary97

நான் கல்லூரியில் படிக்கும்போதே என் அப்பா இறந்துவிட்டார். நான், தங்கை என வீட்டில் இரண்டு பெண் குழந்தைகள். எனவே எங்கள் அம்மா, தான் ஆயுளோடு, ஆரோக்கியத்தோடு இருக்கும்போதே எங்கள் இருவருக்கும் திருமணத்தை விரைவில் முடித்துவிட வேண்டும் என்று, அப்பா இறந்து ஆறு மாதங்கள் ஆனதுமே தீவிரமாக மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்.

Representational Image

ஒரு வரன் வந்தது. எனக்கு அந்த 20 வயதில், மாப்பிள்ளை, புகுந்த வீடு, திருமணம் குறித்தெல்லாம் என்ன எதிர்பார்க்க வேண்டும் என்றுகூட தெரியாது. எனவே, வந்த வரனுக்கு அம்மா சம்மதம் சொன்னபோது அதில் சொல்ல எனக்குக் கருத்து எதுவும் இல்லாமல் இருந்தேன். திருமணம் முடிந்தது. ஆனால், அவர் ஒரு சைக்கோ என்று தெரியவந்தபோது நாங்கள் நிலைகுலைந்து போனோம். என்னைவிட, என் அம்மா மிகவும் கலங்கிப்போனார். ’அவசரப்பட்டு மகளின் வாழ்க்கையை பாழாக்கிவிட்டேனே’ என்று உடைந்து போனார். ‘உன் உயிருக்கே பாதுகாப்பில்ல, இந்த வாழ்க்கை வேணாம்’ என்று விவாகரத்து முடிவையும் அம்மா எடுத்து, அந்த நரகத்தில் இருந்து என்னை காப்பாற்றினார்.

பின்னர் நான், ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். இரண்டு வருடங்களில் அம்மா மீண்டும் திருமணப் பேச்சை எடுக்க, ‘தங்கச்சிக்கு கல்யாணத்தை முடிங்க, அப்புறம் பார்த்துக்கலாம்’ என்றேன். அதேபோல, என் தங்கைக்கு திருமணத்தை முடித்தோம். அவளுக்குக் குழந்தை பிறந்தது. மீண்டும் அம்மா திருமணப்பேச்சை எடுத்தார். ‘ஐந்து வருடங்கள் போகட்டும்’ என்றேன்.

Wedding

எனக்கு 27 வயது ஆனபோது, அம்மா எனக்கு மீண்டும் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார். அவருக்கு அது முதல் திருமணம். மாப்பிள்ளையிடம் நான் நேரடியாகவே பேசி, அவருக்கு இந்தத் திருமணத்தில் சம்மதமா என்று கேட்டேன். என்னைப் பற்றி எல்லாவற்றையும் அறிந்துகொண்டதாகவும், முழு சம்மதம் என்றும் கூறினார். எங்கள் திருமணமும் முடிந்தது. ஆனால், அவர் ஆண்மையற்றவர் என்று தெரியவந்தபோது மீண்டும் என் வாழ்க்கைக் கப்பல் துயரக் கடலில் மூழ்கியது. அந்தத் திருமணமும் விவாகரத்தில் முடிந்தது.

தங்கை கணவர், குழந்தைகள் என்று வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டாள். அம்மாவும் நானும்தான் இருக்கிறோம். நான் இப்போது ஒரு கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். உடன் பணிபுரியும் ஓர் ஆண் நல்ல நண்பராகப் பழக ஆரம்பித்தார். அவர் விவாகரத்துப் பெற்றவர். அந்தக் கதையை அவர் சொன்னபோது, என் கடந்தகாலத்தை நானும் அவரிடம் பகிர்ந்துகொண்டேன். ஒரு வருடத்திற்கு முன்னர், என்னைக் காதலிப்பதாகவும், இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என்றும் கேட்டார்.

நான் வாழ்க்கையில் வாங்கிய அடிகள், என்னை இன்னொரு திருமணம் பற்றி யோசிக்கவிடவில்லை. வாழ்க்கை முழுக்க துணையின்றி இருக்க முடிவு செய்துவிட்டேன். என் முடிவை அவரிடம் கூறினேன். ’சரி நான் உன் கண் முன்னாடியேதான் இருக்கப் போறேன். நானும் சிங்கிள்தான். உனக்கு எப்போவாச்சும் என்னை கல்யாணம் பண்ணிக்கலாம்னு தோணினா சொல்லு, அதுவரை ரெண்டு பேரும் இப்படியே இருப்போம்’ என்றார். இப்போது எனக்கு வயது 29, அவருக்கு 35.

இந்த ஒரு வருடத்தில், அவரை பல நேரங்களில் நான் ஒரு எமோஷனல் சப்போர்ட்டாக உணர்ந்திருக்கேன். வேலை, பெர்சனல் என்று நான் சோர்வாகும் நாள்களில் எல்லாம் கவனித்து எனக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார். இவர் வாழ்க்கை முழுக்கத் துணையாக வந்தால் நன்றாக இருக்கும் என்று மனம் அவ்வப்போது விரும்புகிறதுதான். ஆனாலும், மூன்றாவதாக ஒரு திருமணமா என்று யோசிக்கவே எனக்கு அச்சமாக இருக்கிறது. ஒரு நண்பராக இப்படி இருக்கும் இவர், கணவர் ஆன பின்னர் எப்படி ஆவார் என்ற கேள்வி வருகிறது. நண்பராகவே இருந்துவிட்டால் இப்படியே இருந்துவிடலாமே என்று தோணுகிறது. ’உன் குழப்பங்கள் எல்லாம் முடியும் வரை, என் மேல் உனக்கு நம்பிக்கை வரும்வரை நான் காத்திருக்கிறேன்’ என்கிறார் அவர். என்ன முடிவெடுப்பது?

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.