புதுடெல்லி: கரோனா குறித்த கவலை இப்போதைக்கு தேவையில்லை என்று மூத்த விஞ்ஞானி ராகேஷ் மிஷ்ரா தெரிவித்துள்ளார்.
சீனா, ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் கரோனா தொற்று திடீரென அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, ஒமிக்ரான் பி.எப்.7 எனும் வைரஸ் இந்த நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு கடந்த சில நாட்களாக எடுத்து வருகிறது. சீனா உள்ளிட்ட 5 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு கரேனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரோனா குறித்த கவலை இப்போதைக்கு தேவையில்லை என்று மூத்த விஞ்ஞானி ராகேஷ் மிஷ்ரா தெரிவித்துள்ளார். பெங்களூருவில் உள்ள டாடா மரபியல் மற்றம் சமூகம் நிறுவனத்தின் Tata Institute for Genetics and Society(TIGS) இயக்குநரும் மூத்த விஞ்ஞானியமான ராகேஷ் மிஷ்ரா, இப்போதைக்கு கரோனா குறித்து நாம் கவலை கொள்ளத் தேவையில்லை என்றும், நம் நாட்டில் மக்களுக்கு கரோனா தடுப்பூசி பாதுகாப்பு இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். சீனாவில் கரோனா தடுப்பூசி பாதுகாப்பு இல்லாததால்தான் அங்கு பாதிப்பு அதிகரித்திருப்பதாகத் தெரிவித்துள்ள ராகேஷ் மிஷ்ரா, எனவே, சீனாவோடு ஒப்பிட்டு அச்சம் கொள்ளத் தேவையில்லை என கூறியுள்ளார்.
அதேநேரத்தில், கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் ராகேஷ் மிஷ்ரா வலியுறுத்தியுள்ளார். இதை நாம் உறுதிப்படுத்திக்கொண்டால் நாம் பாதுகாப்பாக இருக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கரோனா பரிசோதனையை அரசு தொடர்வது தேவையான ஒன்று என்றும் ராகேஷ் மிஷ்ரா தெரிவித்துள்ளார்.