குளிர்கால கூட்டத்தொடர்: இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட முக்கியமான மசோதாக்கள் என்னென்ன?

இந்த மாத தொடக்கத்தில் (டிசம்பர் 7) குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து 13 அமர்வுகள் நடந்தது. இதில் மக்களவையில் 9 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் ஏழு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், ஒன்பது மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற கூட்டத்தொடரானது பட்ஜெட் கூட்டத்தொடர் (பிப்ரவரி முதல் மே வரை), மழைக்கால அமர்வு (ஜூலை முதல் செப்டம்பர் வரை), குளிர்கால அமர்வு (நவம்பர் முதல் டிசம்பர் வரை) என மொத்தம் மூன்று பகுதிகளாக நடைபெறும். இதில் குளிர்கால அமர்வு இந்த ஆண்டு டிசம்பர் 7 ஆம் தேதி தொடங்கியது. இதில் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள தவாங்கில் சீனாவின் அத்துமீறல்கள் குறித்து அனல்பறக்கும் விவாதங்கள் நடைபெற்றிருந்தன. இந்நிலையில், குறிப்பிட்ட சில மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட்டன. அதில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் என்னவென்று இக்கட்டுரையில் பார்க்கலாம்.
image
இதுதொடர்பாக செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி “2022-23 ஆம் ஆண்டிற்கான மானியங்களுக்கான துணை கோரிக்கைகளின் முதல் தொகுதி மற்றும் 2019-20 ஆம் ஆண்டிற்கான அதிகப்படியான மானியத்திற்கான கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு முழுமையாக வாக்களிக்கப்பட்டு, அது தொடர்பான ஒதுக்கீட்டு மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. சுமார் 11 மணி நேர விவாதத்திற்குப் பிறகு டிசம்பர் 14ஆம் தேதி இது நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து டிசம்பர் 21 அன்று சுமார் 9 மணி நேர விவாதத்திற்குப் பிறகு ராஜ்யசபா இந்த மசோதாக்களைத் திரும்பப் பெற்றது” என தெரிவித்துள்ளார்.
அமர்வின் போது இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட முக்கிய மசோதாக்கள்:
* வனவிலங்கு (பாதுகாப்பு) திருத்த மசோதா, 2022
* எரிசக்தி பாதுகாப்பு (திருத்தம்) மசோதா, 2022
* டெல்லி நடுவர் மன்றம் (திருத்தம்) மசோதா, 2022
* அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்) ஆணை (இரண்டாவது திருத்தம்) மசோதா, 2022
image
* கடல்சார் கடற்கொள்ளை எதிர்ப்பு மசோதா, 2022
* அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்) ஆணை (இரண்டாவது திருத்தம்) மசோதா 2022
* அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்) ஆணை (நான்காவது திருத்தம்) மசோதா 2022
ஆகியவை.
கிறிஸ்துமஸ் மற்றும் ஆண்டு இறுதிக் கொண்டாட்டங்களுக்காக உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளுக்குச் செல்ல வேண்டும் என்ற கோரிக்கை மற்றும் உணர்வுகளைத் தொடர்ந்து குளிர்கால கூட்டத்தொடர் ஒரு வாரம் குறைக்கப்பட்டது. அதன்படி இரு அவைகளும் நேற்றுடன் ஒத்திவைக்கப்பட்டது.
– அருணா ஆறுச்சாமி

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.