மதுரை: கொரானா மீண்டும் நாட்டில் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என, மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கிசன் ரெட்டி வேண்டுகோள் விடுத்தார். பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள உழவர்சந்தை அருகில் மதுரை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் குப்பைகளை அகற்றி தூய்மை பணியை மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கிசன் ரெட்டி துவக்கி வைத்தார்.
துடைப்பம் மூலம் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்த மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கிசன் ரெட்டி, அதனைத்தொடர்ந்து அப்பகுதியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ முகாமையும் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்கு முன்னதாக மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த மத்திய அமைச்சர் கிசன்ரெட்டிக்கு திருக்கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் கிசன்ரெட்டி, கொரோனா தொற்றுநோய், மீண்டும் நாட்டில் அதிகரிக்க தொடங்கி உள்ளது என்று தனது கவலைகளைப் பகிர்ந்துக் கொண்டார். கொரோனா பரவலைத் தவிர்க்க அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பிரதமர் கூறியது போல கொரானா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கிசன் ரெட்டி, தூய்மை இந்தியாவின் இந்த தூய்மைப் பணித் திட்டம் வெற்றியடைய மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்பதை வலியுறுத்தினார்.
கொரோனா பரவும் நிலையில், பொதுவெளியில் அதிகம் இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள முன்களப்பணியாளர்கள், ஊடகவியலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கிசன் ரெட்டி, ஊடகவியலாளர்களுக்கு முகக்கவசங்களை அமைச்சர் வழங்கினார்.
மதுரையில் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்ட மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கிசன் ரெட்டி, அங்கிருந்து ராமேஸ்வரம் சென்றார்.