கோழிகளை விலங்குகள் வதை சட்டத்தின் கீழ் சேர்ப்பதாக, மத்திய அரசின் கால்நடை பராமரிப்பு அமைச்சக இணையதளத்தில் செய்தி ஒன்று வெளியாக, அது நாமக்கல் மாவட்டத்தில் கோழிகளை உற்பத்தி செய்யும் கோழி பண்ணை உற்பத்தியாளர்களை கொதிப்படைய செய்திருக்கிறது. இதுகுறித்து, ராஜ்யசபா எம்.பி கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் மூலம், நாடாளுமன்றத்தில் குரலெழுப்ப வைத்திருக்கிறார்கள்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில், கால்நடை பாராமரிப்பு தொடர்பாக விவாதம் நடைபெற்றது. இதில், தி.மு.க நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் பேசினார். அதில் பேசிய அவர், “கால்நடை பராமரிப்பு அமைச்சக இணையதளம் மூலம், விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்பு வரைவு (திருத்தம்) மசோதா 2022 தொடர்பாக பங்குதாரர்களிடமிருந்து பரிந்துரைகளை கேட்டு, செய்தி வெளியிட்டுள்ளது. வரைவு பிசிஏ திருத்த மசோதாவின் கீழ் கோழிகளைச் சேர்க்கக்கூடாது என கோழிப் பண்ணையாளர்களின் சார்பாக கோரிக்கை வைக்கிறேன். 20-பில்லியன் டாலர் தொழில்துறை மதிப்புடன் இந்தியா இப்போது உலகின் 3 வது பெரிய முட்டை உற்பத்தியாளராக உள்ளது.
நாட்டில் உள்ள 1.2 பில்லியன் டன் கோழிகளில் ஆண்டுதோறும் 4.8 மில்லியன் டன் கோழிகள் இறைச்சி உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இது மொத்த கோழிகளில் 36% ஆகும். ஓமன், மாலத்தீவு, இந்தோனேசியா, வியட்நாம், பூட்டான், ஜப்பான் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு மூன்று லட்சத்து இருபதாயிரம் மெட்ரிக் டன் முட்டை மற்றும் இறைச்சியை இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது. அதேபோல், நாட்டிலேயே அதிக முட்டை உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டம் கோழிப்பண்ணைக்கு பெயர் பெற்றது. நாள் ஒன்றுக்கு சுமார் ஆறு கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு, இந்தியா முழுவதும் வழங்கப்படுகின்றன. தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், ஒரிசா, மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் மட்டும் முட்டைப் பங்களிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தொழிலில் தோராயமாக 20 லட்சம் குடும்பங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்தத் துறையில் ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில், வரைவு பிசிஏ (திருத்தம்) மசோதா, கோழிப்பண்ணையாளர்களின் கவலைகளைத் தீர்க்கத் தவறிவிட்டது. வளர்ப்புப் பறவைகளை விலங்குகளாகக் கருத முடியாது. ஒரு உதாரணத்தை மேற்கோள் காட்ட விரும்புகிறேன். இந்த மசோதாவில் உள்ள பிரிவு 11 ல் ரூ. 1,000 முதல் ரூ. 2500 வரையிலான அபராத விதிகள் பற்றியது. ஒரு கோழியின் விலை கிட்டத்தட்ட 400 ரூபாய். மேலும் 3 ஏ, 10(2), 11(ஐ), 11சி, 34 போன்ற பல பிரிவுகளும் கோழி பண்ணையாளர்களுக்கு எதிராகவே உள்ளன. ஏற்கனவே, அந்தந்த மாநில அரசுகளின் கால்நடை பராமரிப்பு அமைச்சகம் மாநில சட்டத்தின் கீழ் கோழிகளை ஒழுங்குபடுத்துகிறது. எனவே, இந்த மசோதாவில் முக்கிய பங்குதாரர்கள், கோழிப்பண்ணையாளர்கள் மற்றும் அவர்களின் ஆலோசனைகளை பெற்று இந்த வரைவுத் திட்டத்தில் மாறுதல்கள் செய்ய மத்திய அமைச்சகத்தை கேட்டுக் கொள்கின்றேன்.
கோழி வளர்ப்பு கிராமத் தொழில். அதன் சிறப்புத் தன்மை மற்றும் பொருளாதார நிலைத்தன்மை காரணமாக, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர், அந்தந்த மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து, பால் உற்பத்தி செய்யும் விலங்குகளுக்கு ஏற்ப கோழிகளை உற்பத்திப் பறவைகளாகக் கருதி முறைப்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். முழு வரைவு பிசிஏ திருத்த மசோதாவில், கோழிக்கு விலக்கு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று பேசினார்.
இந்நிலையில், இதற்கு பதிலளித்துப் பேசிய மத்திய கால்நடைத் துறை அமைச்சர் ஸ்ரீ புருஷோத்தம் ரூபாலா,
“கோழிப்பண்ணையாளர்கள் சம்பந்தமான கோரிக்கையை விடுத்துள்ள உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்களுக்கும், இந்தியாவில் உள்ள கோழிப்பண்ணையாளர்கள் அனைவருக்கும் தங்கள் மூலமாக நான் ஒரு உறுதிமொழியை அளிக்க விரும்புகிறேன்.
இந்தியாவில் உள்ள கோழிப்பணியாளர்கள் நலன் பாதிக்கப்படும் வகையில் மத்திய அரசு, எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாது. மேலும் கோழிப்பண்ணையாளர்கள் நலன் பாதிக்கும் வகையில் சட்ட திருத்தத்தைம் கொண்டு வராது. இணையதளத்தில் மாநில அரசுகளின் ஆலோசனைகளையும், கோழிப்பண்ணையாளர்களின் ஆலோசனைகளையும், விவசாயிகளின் ஆலோசனைகளையும் பெற்ற பிறகு தான் சட்ட திருத்தம் கொண்டு வரப்படும். கோழிப்பண்ணைத் தொழில் நாட்டில் உள்ள ஒரு வலிமையான தொழில் என்பதையும், முக்கிய தூண் என்பதையும், மத்திய அரசு உணர்ந்துள்ளது” என்று பதிலளித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய, தமிழ்நாடு கோழி பண்ணையாளர்கள் சங்கத் தலைவரான சிங்கராஜ்,
“பத்துநாளைக்கு முன்னாடி கால்நடைத்துறை வெப்சைட் பக்கத்தில், ‘கோழிகளை விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப் போறதாக பதிவாகியிருந்த ஒரு செய்தியை பார்த்ததும், கோழிப்பண்ணை உரிமையாளர்கள் எல்லாம் அதிர்ச்சியாயிட்டோம். அதாவது, கோழிகளை செல்லப்பிராணிகள் பட்டியலில் கொண்டுவருவதற்கான சட்டம் அது. அப்படி சட்டமசோதா கொண்டு வந்தா, வீடுகள்ல நாய், மாடு வளர்ப்பதுபோல் ஓரிரெண்டு கோழிகளை மட்டும் வளர்க்க முடியும். கோழிப்பண்ணைகளை நடத்த முடியாது.

மொத்தத்தில் வியாபாரரீதியாக கோழிகளை வளர்க்க முடியாத நிலை வரும். நாமக்கல்லில் 1,100 கோழிப்பண்ணைகள் உள்ளன. நாளொன்றுக்கு 6 கோடி முட்டைகளும், மாதத்துக்கு 30 லட்சத்துக்கும் குறையாத எண்ணிக்கையிலான கறிக்கோழிகளும் நாமக்கல்லில் இருந்து வெளியில் கொண்டுச்செல்லப்படுகின்றன. இதை நம்பி லட்சக்கணக்கானவர்களின் வாழ்வாதாரம் இருந்து வருகிறது. மிருகங்கள் வதை சட்டப்பிரிவில் கோழிகளை சேர்த்தால், அத்தனை பேர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும்.
இதனால், உடனே எங்க மாவட்டத்துல உள்ள ராஜ்யசபா எம்.பி ராஜேஸ்குமார் கவனத்துக்கு உடனே இந்த விவகாரத்தை கொண்டுப்போனோம். உடனே அவர், ‘இதைப்பற்றி விரிவான விவரங்களை கொடுங்க. கண்டிப்பாக நாடாளுமன்றத்தில் இதுபற்றி பேசுகிறேன்’னு சொன்னார். உடனே, கால்நடைத்துறையில் பணியாற்றி ஓய்வுப்பெற்றவரான மருத்துவர் சந்திரசேகர் மூலமா இந்த சட்டத்தின் அபாயக்கூறுகள் பற்றி, ராஜேஸ்குமாரிடம் விளக்கி சொல்ல வைத்தோம். அதை அவரும் நாடாளுமன்றத்தில் பேசி, எங்களின் வாழ்வாதாரத்தை காத்துள்ளார். அவருக்கு கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்தோம். ஜல்லிகட்டு மாடுகளுக்கு பீட்டா என்ற அமைப்பு இருப்பதுபோல், கோழி சம்பந்தமாக ஒரு அமைப்பு உருவாகி, மத்திய அரசை, கோழி இனங்களை மிருகவதை தடுப்புச் சட்டத்தின்கீழ் கொண்டுவர வலியுறுத்தியிருக்கிறது. அதைதொடர்ந்தே, மத்திய அரசு கால்நடைத்துறை அப்படியொரு செய்தியை இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்போதைக்கு, மத்திய அமைச்சர் உத்தரவாதம் கொடுத்தாலும், கோழிகளை மிருகவதை தடுப்புச்சட்டத்தின் கீழ் கொண்டுவரக்கூடாது என்பதை அதே இணையதளத்திலேயே வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.