திருவனந்தபுரம்: சபரிமலையில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜைக்கு நாளை மறு நாள் ( 27ம் தேதி) மதியம் 12.30க்கும், 1 மணிக்கும் இடையே நடைபெறுகிறது. இந்நிலையில் தங்க அங்கி ஊர்வலம் ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து நேற்று முன் தினம் ஊர்வலமாக புறப்பட்டது. இந்த ஊர்வலம் நாளை மதியம் பம்பையை அடையும். பம்பை கணபதி கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக வைக்கப்பட்ட பின், தங்க அங்கி ஊர்வலம் சன்னிதானத்தை நோக்கி புறப்படும்.
ஊர்வலம் சன்னிதானத்தை அடையும்வரை பம்பையில் இருந்து பக்தர்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்படும். இதற்கிடையே சபரிமலையில் நேற்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறந்தபோது தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.