திருவனந்தபுரம்: மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம் செல்வதால், வரும் 26ம் தேதி மதியத்திற்குப் பின்னர் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. இந்நிலையில் பக்தர்கள் கூட்டம் இன்றும் கட்டுக்கடங்காமல் உள்ளது. சபரிமலையில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜைக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளன. வரும் 27ம் தேதி மதியம் 12.30க்கும், 1 மணிக்கும் இடையே மண்டல பூஜை நடைபெறுகிறது. இந்நிலையில் தங்க அங்கி ஊர்வலம் ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து நேற்று ஊர்வலமாக புறப்பட்டது.
இந்த ஊர்வலம் கோழஞ்சேரி, பத்தனம்திட்டா வழியாக 26ம் தேதி மதியம் பம்பையை அடையும். பம்பை கணபதி கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக வைக்கப்பட்ட பின், தங்க அங்கி ஊர்வலம் சன்னிதானத்தை நோக்கி புறப்படும். ஊர்வலம் சன்னிதானத்தை அடையும்வரை பம்பையில் இருந்து பக்தர்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்படும். இதற்கிடையே சபரிமலையில் இன்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இன்று 90 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனத்திற்கு முன்பதிவு செய்துள்ளனர். இன்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறந்தபோது தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதற்கிடையே நேற்று இரவு காவல்துறை சார்பில் சன்னிதானத்தில் கற்பூர ஆழி ஊர்வலம் நடைபெற்றது.