டிபிஐ வளாகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பழகனுக்கு சிலை: தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

சென்னை: சென்னை டிபிஐ வளாகத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் அன்பழகனுக்கு சிலை அமைக்க தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், கோவை உடையாம்பாளையத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “மறைந்த முன்னாள் அமைச்சர் அன்பழகனின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவையொட்டி, பள்ளிக் கல்வி இயக்குனரகம் அமைந்துள்ள டிபிஐ வளாகத்தில் அவரது சிலை அமைக்கப்படும் என நவம்பர் 30-ம் தேதி தமிழக அரசு அறிவித்தது.

சாலைகள், நடைபாதைகள் மற்றும் பொது இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சிலைகள் அமைக்கக் கூடாது என உச்ச நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. மறைந்த தலைவர்களுக்கு சிலைகள் வைத்தால், ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் தலைவர்களின் சிலைகளை அமைக்கும். இது தவறான முன்னுதாரணமாகிவிடும்.

மறைந்த தலைவர்களை கவுரவிக்க அவர்கள் பெயரில் நலத் திட்டங்களை தொடங்கினால், பொதுமக்களுக்கு பயனளிக்கும்.அதை விடுத்து சிலைகளை அமைப்பதால் அரசுக்கு செலவு ஏற்படுவதுடன், எதிர்கட்சியினர் மத்தியில் விரோதத்தையும் ஏற்படுத்தும்.

ஏற்கெனவே சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்தில் அன்பழகனுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. எனவே, டிபிஐ வளாகத்தில் அவரது சிலையை அமைக்க தடை விதிக்க வேண்டும்” என கோரியுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.