புதுடெல்லி: புதுடெல்லியில் உள்ள புனித இருதயர் கதீட்ரலில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினார்.
கிறிஸதுமஸ் பண்டிகை உலகம் முழுவதும் நாளை கொண்டாடப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு நாடு முழுவதிலும் கிறிஸ்துவ வழிபாட்டுத் தலங்கள் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களின் வருகைக்காக தயார்படுத்தப்பட்டுள்ளன. தேவாலயங்களில் இன்று நள்ளிரவில் கூட்டுப்பிரார்த்தனை நடைபெற இருக்கிறது. இந்நிலையில், டெல்லியில் உள்ள புனித இருதயர் கதீட்ரலில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடினார்.
புனித இருதயர் கதீட்ரலில் மெழுகு வர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்த அவர், அங்கிருந்த குடிலையும் பார்வையிட்டார். இதையடுத்து, பள்ளி மாணவிகள் கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாட, அவற்றை கேட்டு மகிழ்ந்த திரவுபதி முர்மு, மாணவிகளுக்கு பரிசுப் பொருட்களை வழங்கினார். பின்னர் அனைவரோடும் சேர்ந்து குழு புகைப்படங்களையும் அவர் எடுத்துக்கொண்டார்.
கிறிஸ்துமஸ் தினத்தன்று பக்தர்களின் வருகை அதிகம் இருக்கும் என்பதால் ஒரு நாள் முன்னதாகவே கதீட்ரலிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வருகை தந்ததாகவும், மனித குலத்தின் முன்னேற்றத்திற்காகவும், ஆரோக்கியத்திற்காகவும் அவர் பிரார்த்தனை செய்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.