இன்று முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நினைவு தினம். அதை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். “அ.தி.மு.க-வை ஒருங்கிணைக்கும் பணியை முன்னெடுக்க சசிகலா யார்? அவருக்கும் அ.தி.மு.க-வுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? டிடிவி தினகரன் ஓ.பன்னீர்செல்வம் இருவரையும் ஒருங்கிணைக்கும் பணியை வேண்டுமானால் சசிகலா செய்யட்டும். ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழக்கூடாது.

அ.தி.மு.க-வில் இப்போது எந்த பிரச்னையும் இல்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி எழுச்சியாக போய்க்கொண்டிருக்கிறது. சசிகலாவின் கருத்தை நிச்சயமாக யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர் சொல்வது தேவையில்லாத கருத்து. அ.தி.மு.க-வில் எந்த சண்டையும். சிலர் கட்சியை விட்டு வெளியே போனார்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோர் தனியாக வந்தாலும், அணியாக வந்தாலும் அ.தி.மு.க-வில் அவர்களுக்கு இடம் இல்லை. அவர்களை கட்சியிலும் கூட்டணியிலும் சேர்த்துக் கொள்ள மாட்டோம். நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி ஒதுக்கும் இடங்களை தான் மற்றவர்கள் பெற முடியும்.

எங்களை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. எங்கள் தலைமையில் தான் கூட்டணி அமையும். நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பூர்வாங்க வேலைகளை தொடங்கி விட்டோம். தி.மு.க ஆட்சி மீது மக்களுக்கு கடுமையான அதிருப்தி இருக்கிறது. அந்த அதிருப்தியையும் ஜெயலலிதாவின் திட்டங்களையும் மக்களுக்கு எடுத்துச் சொல்லி வருகிறோம். நாங்கள் ஆட்சியில் இருந்தபோது பொங்கல் பரிசு ரூபாய் 5,000 கொடுத்திருக்கலாம் என்றனர் தி.மு.க-வினர். இப்போது ஏன் பொங்கலுக்கு 5,000 கொடுக்கவில்லை? நாடாளுமன்றத் தேர்தல் வருவதால் 1,000 ரூபாய் கொடுக்கிறார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.