பெரியார் 49-வது நினைவு தினத்தையொட்டி, கோவை காந்திபுரத்தில் இருக்கும் பெரியாரின் சிலைக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ” கடந்த அதிமுக ஆட்சியில் இழந்த பெருமைகளை மீட்டெடுத்து இன்று ஒரு சிறந்த ஆட்சியை முதல்வர் வழி நடத்தி வருகிறார். ஒன்னரை ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் சீரழிக்கப்பட்ட நிதி நிலைமைகளை சரி செய்து 85 விழுக்காடு வாக்குறுதிகளை முழுவதுமாக வழங்கி உள்ளார்.
கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது. தனியார் பள்ளிகளில் மாணவர் குறிப்பேட்டில் சாதி குறிப்பிடுவதற்கு கல்வி அமைச்சரின் கவனத்திற்கு எடுத்து சென்று நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம். பாஜக தமிழகத்தில் எங்கு உள்ளது?. எத்தனை பேர் உள்ளனர்?. எத்தனை வாக்குச்சாவடிகள் உள்ளது என்பதுகூட தெரியாத கட்சி பாஜக. 345 ரூபாய் மதிப்புள்ள காது கேளாதோர் கருவியை கொடுத்துவிட்டு பத்தாயிரம் ரூபாய் என பொய் சொல்லக்கூடியவர்கள் பாஜகவினர்.
37 வயதில் 20,000 புத்தகங்கள் படித்துள்ளனர் என பொய் சொல்கின்றனர்.பெட்ரோல் டீசல் விலை எவ்வளவு உயர்ந்துள்ளது. கேஸ் சிலிண்டர் விலை எவ்வளவு உயர்ந்துள்ளது. சாமானிய மக்களின் நிலைமை என்ன?. கேஸ் மானியம் எத்தனை பேருக்கு வருகிறது?. இப்படிப்பட்ட சூழலில் சிறந்த ஆட்சி நடத்தும் தமிழகத்திற்கு களங்கம் விளைவிக்க கூடிய வகையில் சமூக வலைதளத்தை பாஜகவினர் பயன்படுத்துகின்றனர்” என குற்றம்சாட்டியுள்ளார்.