திருப்பதியில் ஜனவரி 1 முதல்… அமலாகிறது கொரோனா கட்டுப்பாடு; இதெல்லாம் கட்டாயம் தேவை!

சீனா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் கொரோனா வைரஸின் உருமாறிய மாதிரிகள் வேகமாக பரவ தொடங்கியுள்ளன. இதனால் இந்தியாவில் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. முதல்கட்டமாக அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருவோர் தான் புதிய வகை வைரஸ் பரவலுக்கு முக்கிய காரணமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

கெடுபிடி தொடங்கியது

அந்த வகையில் விமான நிலையங்களில் கெடுபிடி அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கவனம் திரும்பியுள்ளது. அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு நாளும் கூட்டம் அலைமோதி வருகிறது. குறிப்பாக ஜனவரி தொடங்கினாலே வைகுண்ட ஏகாதசி நிகழ்வு கோலாகலமாக நடைபெறும்.

வைகுண்ட ஏகாதசி நிகழ்வு

சொர்க்க வாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் சிறப்பு டிக்கெட் பெற்று தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும். வரும் 2023ஆம் ஆண்டிலும் ஜனவரி 2 முதல் 11ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறப்பு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் வகையில் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மீண்டும் கட்டுப்பாடுகள்

நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் டிக்கெட்கள் வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. சர்வ தரிசன டோக்கன்களை பொறுத்தவரை திருப்பதியில் மட்டுமே பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. வைகுண்ட ஏகாதசி விழாவை ஒட்டி திருமலையில் கூட்ட நெரிசலை சமாளிக்க வேண்டிய பொறுப்பு திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக வரத் தொடங்கியுள்ளன.

ஜனவரி ஒன்று முதல்

எனவே வரும் ஜனவரி 1 முதல் 11ஆம் தேதி வரை சிறப்பு தரிசனத்திற்கு முன்பதிவு செய்பவர்கள் கொரோனா தடுப்பூசி சான்று அல்லது கொரோனா நெகடிவ் சான்று சமர்பிக்க வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதை பக்தர்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகள் தவிப்பு

கடந்த இரண்டு ஆண்டுகளாக திருப்பதியில் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அனைவருக்கும் தரிசன டோக்கன்கள் அளித்து கொரோனா தடுப்பூசி சான்று அல்லது நெகடிவ் சான்று கட்டாயம் என கேட்டுக் கொள்ளப்பட்டது. ஒருகட்டத்தில் இலவச தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டது. 300 ரூபாய் சிறப்பு தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்பட்டது.

அடுத்த மாதம் என்ன நடக்குமோ?

குறிப்பாக திருப்பதியில் லாக்டவுன் உத்தரவுகள் அமலானதால் பக்தர்கள் பலரும் சிரமத்திற்கு ஆளாகினர். கடும் கட்டுப்பாடுகளால் நிலைமை படிப்படியாக சீரடையத் தொடங்கியது. அதன்பின்னர் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. நடப்பாண்டு தொடக்கத்தில் இருந்தே திருமலையில் கட்டுப்பாடுகள் பெரிதாக விதிக்கப்படவில்லை.

முகக்கவசம் அணிவது கூட விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனால் டிசம்பர் 2022 வேறு மாதிரியான முகத்தை காட்ட தொடங்கியுள்ளது. வரும் ஜனவரியில் என்ன நடக்கப் போகிறது என கலக்கம் ஏற்பட்டு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.