திருப்பதி : திருப்பதியில் நேற்று நடைபெற்ற டேப் வழங்கும் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்குவது அரசின் லட்சியம் என்று எம்எல்ஏ கருணாகரன் தெரிவித்துள்ளார்.
திருப்பதி ஜவஹர்லால் நேரு அரசு மேல்நிலை பள்ளியில் நேற்று 8ம் மாணவ, மாணவிகளுக்கு டேப் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. எம்எல்ஏ கருணாகரன் தலைமை தாங்கினார். மேயர் சிரிஷா மற்றும் ஆணையாளர் அனுபமா அஞ்சலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், எம்எல்ஏ கருணாகரன் பேசியதாவது: முதல்வர் ஜெகன்மோகன் அரசு பள்ளி தரமான கல்வி அளிக்க மாநிலம் முழுவதும் ₹1,400 கோடியில் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழில்நுட்ப கல்வி பாட திட்டம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 4,56,832 டேப்களை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வருகிற 28ம் தேதிக்குள் வழங்கப்படும். திருப்பதியில் 28 பள்ளிகளில் படிக்கும் 1,856 மாணவர்கள் மற்றும் 148 ஆசிரியர்களுக்கு 2,004 டேப்கள் வழங்கப்படும். இன்று உங்களுடன் இருக்கும் நகராட்சி ஆணையர் ஒரு இளைஞராக இருக்கிறார். ஆனால், நம் அனைவரையும் விட மூத்த ஐஏஎஸ் அதிகாரியாக கல்வியால் மட்டுமே இந்த மரியாதை சாத்தியமானது.
கல்வி, தொழில்நுட்ப கல்வி கற்று தருபவர்கள் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும், படிப்பில் கவனமும், ஆர்வமும் இருக்க வேண்டும். அப்போது தான் உயர் நிலைக்கு உயர முடியும். படிப்பை தவிர வேறு எண்ணங்கள் மற்றும் லட்சியங்களுக்கும் செல்ல கூடாது. தினமும் காலையில் பள்ளிக்கு வரும் நீங்கள் பிரார்த்தனை செய்யும் போது, ஒவ்வொரு நாளும் உங்கள் பாடத்திட்டத்தை விடாமுயற்சியுடன் படிக்க வேண்டும். பெற்றோரிடம் நீங்கள் காட்டும் அன்பில் குறைந்தது 50 சதவீதம் உங்களை சுற்றியுள்ளவர்களிடமும் காட்ட வேண்டும்.
கல்வி என்பது தீராத சொத்து. தேசிய அளவில் ஒவ்வொரு ஏழை மாணவரும் முன்னேறும் வகையில் முதல்வர் ஜெகன்மோகன் கல்விக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தற்போது பள்ளிகளில் வசதிகள் மற்றும் கல்வி தரத்திற்காக சிபிஎஸ்இ பாடத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நீங்கள் பெறும் டேப் மூலம் தொழில்நுட்பத்துடன் உயர் நிலைக்கு உயர்வீர்கள் என்று நம்புகிறோம். இவ்வாறு, அவர் பேசினார்.