திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 2 டோஸ் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்: வைகுண்ட ஏகாதசிக்கான டிக்கெட் 30 நிமிடத்தில் காலி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமியை தரிசிக்க 2 டோஸ் தடுப்பூசி சான்றிதழ் அவசியம் என்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், வைகுண்ட ஏகாதசிக்கான டிக்கெட் 30 நிமிடத்தில் காலியானது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அடுத்தாண்டு ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு மற்றும் 2ம் தேதி முதல் 11ம் தேதி வரை வைகுண்ட வாயில் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த 11 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 20 ஆயிரம் டிக்கெட்கள் என 2.20 லட்சம் டிக்கெட்கள்  நேற்று காலை 9 மணிக்கு ரூ300 சிறப்பு நுழைவு தரிசனம்  டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்படப்பட்டது.

30 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் காலியானது. இதுதவிர திருப்பதியில் 9 இடங்களில் வைகுண்ட ஏகாதசிக்கான 10 நாட்களுக்கான இலவச நேர ஒதுக்கீடு டிக்கெட் 1ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. ஒரு நாளைக்கு 50 ஆயிரம் டிக்கெட்டுகள் என்ற நிலையில் முதலில் வரும் பக்தர்களுக்கு முன்னுரிமை அளித்து வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், சீனா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதன் ஒருபகுதியாக, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனத்திற்கு வரக்கூடிய பக்தர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் அல்லது 48 மணிநேரத்திற்கு முன்னதாக எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைபிடிப்பது உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என தேவஸ்தான இணையத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நாளை மறுதினம் தரிசனம் ரத்து
வைகுண்ட ஏகாதசியையொட்டி, திருப்பதியில் வருகிற 27ம்(நாளை மறுதினம்) தேதி ஆழ்வார் திருமஞ்சனம்(கோயில் சுத்தம் செய்யும் பணி) நடைபெற உள்ளது. அன்று காலை 6 மணி முதல் 12 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது நிறுத்தப்படும். சுத்தம் செய்யும் பணிகள் நிறைவடைந்ததும் 6 மணி நேரத்திற்கு பிறகு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும், விஐபி தரிசனமும் ரத்து செய்யப்படுகிறது. எனவே, மக்கள் பிரதிநிதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதங்கள் 26ம் தேதி ஏற்கப்படாது. எனவே, பக்தர்கள் தேவஸ்தானத்தின் முடிவுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தேவஸ்தான அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.