வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 2ஆம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. 10 நாட்கள் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். நாள்தோறும் 25 ஆயிரம் பக்தர்கள் இந்த சிறப்பு தரிசனத்தில் பங்கேற்கும் வகையில் சுமார் 2.50 லட்சம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. ரூ.300 கட்டணத்தில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த டிக்கெட்டுகளை பெற பக்தர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.
ஆண்டு தோறும் மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசி சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இம்மாதத்தில் 20 நாட்கள் பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி வழிபாடு நடைபெறும். இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த வழிபாடு அனைத்து பெருமாள் கோவில்களிலும் தொடங்கியது. குறிப்பாக வெகு சிறப்பாக திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படும். இந்த வழிபாட்டில் கலந்து கொள்ள உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
இலவச தரிசனத்திற்காக மட்டும் 5 லட்சம் தரிசன டோக்கன்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 50,000 டோக்கன்கள் என்ற அடிப்படையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். ரூ.300 கட்டணத்தில் சிறப்பு தரிசனம் மேற்கொள்ளும் வகையில் 2.50 லட்சம் பக்தர்கள் அனுமதிக்கப்பட இருக்கின்றனர். சர்வ தரிசனத்திற்கான டோக்கன் திருப்பதியில் மட்டுமே பெற முடியும் என என அறிவிக்கப்பட்டுள்ளது. தேவையற்ற கூட்ட நெரிசலை தவிர்க்கும்பொருட்டு தேவஸ்தானத்தில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தரிசன டோக்கன் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் ஆகியவை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.