புதுடெல்லி: கொரோனா மீண்டும் தலை தூக்கும் போது, நடைபயணத்தை மேற்கொள்ளும் ராகுல் காந்தி நாட்டின் நலனைப் பற்றி கவலைப்படவில்லை என ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம்சாட்டினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் நேற்று டெல்லியை வந்தடைந்த நிலையில், ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நடைபயணத்தில் கடந்த வாரம் ராகுலுடன் பங்கேற்ற இமாச்சல் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே ராகுல் கொரோனா சோதனை செய்து கொண்டாரா என்பதை அறிய விரும்புகிறேன். சீனா, ஜப்பானில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
அங்கு மருத்துவமனைகளுக்கு வெளியே நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கிறார்கள். இறந்தவர்களின் உடல்கள் குவிந்து கிடக்கின்றன. இதனால் கொரோனா மீண்டும் தலை தூக்கும் அபாயம் இருக்கும் நிலையில், நாட்டின் நலனைப் பற்றி கவலைப்படாமல், ஒரு குடும்பத்தைப் பற்றி மட்டுமே காங்கிரஸ் கவலை கொள்கிறது. இதன் மூலம் காங்கிரஸ் தனது பொறுப்பை தட்டிக் கழித்துள்ளது. நடைபயணத்தில் ராகுலுடன் யாரேனும் நடக்கிறார்கள் என்றால், அவர்கள் ‘துக்டே துக்டே’ (சிறு சிறு) கும்பலை சேர்ந்தவர்கள். இந்தியா சிதைவதை பார்க்க விரும்புபவர்கள் எப்படி இந்தியாவை ஒன்றிணைக்க பேசுவார்கள். வெறுப்பு விதைகளை விதைக்க தெரிந்தவர்கள் எப்படி அன்பைப் பரப்புவதைப் பேசுவார்கள்?’’ என்றார்.