“நம்ம ஸ்கூல்” திட்டம்: இபிஎஸ் விமர்சனங்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் ஆதாரங்களுடன் பதில் 

சென்னை: நம்ம ஸ்கூல் திட்டம் தொடர்பான எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கேள்விகளுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பதில் அளித்துள்ளார்.

நம்ம ஸ்கூல் திட்டம் தொடர்பான எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கேள்விகளுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அளித்துள்ள விரிவான பதிலின் விவரம்:

இபிஎஸ் கேள்வி: முந்தைய அரசு சி.எஸ்.ஆர். பங்களிப்புகளிலிருந்து நிதியுதவி பெறுவதற்காக ஓர் இணையதளத்தை உருவாக்கியதா?

அன்பில் மகேஸ் பதில் : முந்தைய அரசு இணையதளம் உருவாக்குவதாக அறிவித்தாலும் – அது வெளிப்படையானதாக இல்லை. பல்வேறு குறைபாடுகளில் சிக்கித் திணறியது. பள்ளிக் கல்வித் துறைக்கு பள்ளிகளுக்கு வர வேண்டிய நன்கொடைகளை மாநில அளவிலான பெற்றோர் ஆசிரியர் கழகமே பெற்றுக் கொண்டது. இக்கழகத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு தனியான சேமிப்புக் கணக்கில் 2019-ம் ஆண்டு முதல் சிஎஸ்ஆர். நிதிகள் பெறப்பட்டுள்ளன. எனினும் அந்த நிதியுதவியைப் பள்ளிகளுக்கு அனுப்புவதற்கான ஒரு நம்பத்தகுந்த கட்டமைப்போ வெளிப்படைத் தன்மையுடன் கூடிய வழிமுறையோ அதிமுக ஆட்சியில் ஏற்படுத்தப்படவில்லை. அனைவராலும் அறியப்பட்ட வழிமுறையோ ஏற்படுத்தப்படவில்லை. கையாளும் வழிமுறை, நிதி சென்று சேரும் முறை, பொறுப்பாக நிதியைக் கையாளும் தன்மை போன்றவற்றில் அத்திட்டம் மிகப் பலவீனமாகவும் மேலோட்டமாகவும் இருந்தது.

இவ்வளவு குறைபாடுகளுடன் கூடிய ஒன்றைத் தொடர இயலாது என்னும் நிலையில், அதற்கான மாற்றுத் திட்டத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பு திமுக அரசுக்கு இருந்தது. திமுக அரசில் துவங்கப்பட்டுள்ள இந்தப் புதிய திட்டம் சிஎஸ்ஆர் மூலமாகப் பெறப்படும் நிதி மட்டுமல்லாது, முன்னாள் மாணவர்கள், புரவலர்கள், தனிநபர்கள் போன்றவர்களிடம் இருந்து பெறப்படும் நிதியை நிர்வகிக்க இலகுவான வழிமுறைகளுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புணர்வுடனும் உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறையிலும் நிதித் துறையிலும் உள்ள மூத்த அதிகாரிகளை இயக்குநர்களாகக் கொண்ட ஒரு குழுவால் இத்திட்டம் நிர்வகிக்கப்பட உள்ளது. தனியார் துறையைச் சேர்ந்த ஒருவர் இத்திட்டத்தின் கவுரவத் தலைவராக இருப்பார். ஒவ்வொரு பள்ளிக்கும் என்னென்ன தேவை என்பதை அந்தந்தப் பள்ளியைச் சார்ந்த பள்ளி மேலாண்மைக் குழுக்கள் கண்டறிந்து அவற்றை நிறைவேற்றத் தேவைப்படும் திட்டங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலமாக அனுப்பி வைக்கவுள்ளன.

இபிஎஸ் கேள்வி: நிதி பெறும் முயற்சிகள் மூலமாக முந்தைய அ.இ.அ.தி.மு.க அரசு ரூ.84 கோடி வரை நிதியுதவியைப் பெற்றதாக எதிர்க்கட்சி தலைவர் தனது அறிக்கையில் சொல்லியிருப்பது உண்மையா?

அன்பில் மகேஸ் பதில் பதில்: 2017-இல் தொடங்கியதாகக் கூறுகிறார் எதிர்க்கட்சித் தலைவர். ஆனால் 18.09.2019 முதல் 22.04.2021 வரையிலான காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில் பெறப்பட்ட ஒட்டுமொத்த நிதி, வட்டியுடன் சேர்த்து, ரூபாய் 9,78,416 மட்டுமே. இந்தத் தொகை M/S TNSPTA CSR Fund என்கிற பெயரிலிருந்த பொது சேமிப்புக் கணக்கில் சேர்ந்துள்ளது. எனவே 84 கோடி ரூபாய் நிதி சேர்ந்தாகக் கூறுவது அடிப்படை ஆதாரமற்றது. அப்பட்டமான பொய். அந்த 84 கோடி ரூபாய் எங்கே என்பதை அரசு பொறுப்பில் அப்போது இருந்த எடப்பாடி பழனிச்சாமி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

இபிஎஸ் கேள்வி: நம்ம ஸ்கூல் திட்டம் தொடக்க விழாவிற்காக 3 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதா?

அன்பில் மகேஸ் பதில்: நம்ம ஸ்கூல் நம்ம ஊர்ப் பள்ளி தொடக்க விழாவிற்காக 3 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக் கூறுவது அபத்தமானது. இத்தொகை வரும் ஓராண்டு முழுவதற்கும் மாவட்ட ஆட்சியர்கள் நிறுவனங்களுடன் நடத்தவிருக்கும் கூட்டங்களுக்காகவும், ஊடகங்களில் செய்தியைக் கொண்டு சேர்ப்பதற்காகவும், விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்காகவும், இத்திட்டத்தில் பங்களிப்பவர்களை ஒன்றுசேர்க்கவும், திட்டம் குறித்த ஒலித்துண்டுகளையும் காணொலிகளையும் உருவாக்குவதற்கும், பரப்புரைக்காகவும், தொடக்க விழாவுக்கு முன்பே நடந்த திட்டமிடல் கூட்டங்களுக்கும், தொடக்க விழாவுக்காகவும் சேர்த்து இந்த 3 கோடி ரூபாய் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆகவே ஒரே நாளில் 3 கோடி ரூபாய் செலவு என்பது அரைவேக்காட்டுத் தகவல்.

சமத்துவம், ஜனநாயகமான வழிமுறை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊர்ப் பள்ளியின் ஒட்டுமொத்த அணுகுமுறை. பொது மனசாட்சியைத் தட்டி எழுப்பி தரமான பள்ளிக் கல்வி குறித்த விழிப்புணர்வை உண்டாக்கி அவர்களைப் பள்ளிகளின்பால் அதிக உரிமை எடுக்கச் செய்வதற்கான ஒரு முயற்சி இது. பள்ளிகளை மேம்படுத்துவதற்கான ஆதரவையும் பங்களிப்பதற்கான அணிதிரட்டலையும் உருவாக்கும் பொருட்டு, மாவட்டம் வட்டாரம் ஊராட்சி அளவிலான பல்வேறு பரப்புரைகளின் விளைவாகக் கொண்டுவரப் பட்டதே இத்திட்டம். தொடக்க விழா நடந்த டிசம்பர் 19, 2022 அன்று மட்டும் 50.84 கோடி ரூபாய் அங்கு வருகை தந்திருந்த பல நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்களித்ததன் வழியாக ஒரே நாளில் திரட்டப்பட்டது என்பது இத்திட்டத்தின் மீதும் இந்த அரசின் மீதும் வைத்துள்ள நம்பிக்கைக்குச் சான்று.

எனவே இத்திட்டம் குறித்துச் சரியான புரிதல் இல்லாதவர்கள் சொல்லும் வதந்திகளை நம்பி, ஒரு எதிர்க்கட்சித் தலைவர் என்பதற்காக அடிப்படை ஆதாரமற்ற, அபாண்டமான பொய் மூட்டைகளை அறிக்கையாக விடுவது துரதிர்ஷ்டவசமானது. தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு திராவிட மாடல் ஆட்சியில் வலுப்பட்டுவிடக் கூடாது, மாணவ – மாணவிகள் பயன்பெற்று விடக்கூடாது என்ற உள்நோக்கத்துடன், திமுக அரசின் புதிய திட்டத்திற்கு வரும் நன்கொடையாளர்களையும் தடுக்கும் நோக்கில் எடப்பாடி பழனிசாமி செயல்படுவது அவருக்கும் அழகல்ல. அவர் வகிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கும் பொருத்தமல்ல.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.