புதிய கல்விக்கொள்கை, தொலைநோக்கு கொண்ட எதிர்கால கல்வி முறைக்கு வழிவகுக்கிறது – பிரதமர் மோடி


குருகுல கல்வி முறை

குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள ஸ்ரீ சுவாமி நாராயண் குருகுலத்தில் 75-வது அமுத பெருவிழா கொண்டாட்டம் நடந்தது. இதில் பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் பழைய கால குருகுல கல்வி முறையை பாராட்டி பேசினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

இந்தியாவில், வாழ்க்கையின் மிக உயர்ந்த நோக்கமாக அறிவு இருந்து வருகிறது. நாட்டின் கல்வித்துறையில் இழந்த மகிமையை மீட்ெடடுக்க மகான்களும், ஆன்மீக குருக்களும் உதவினர்.

உயர்கல்வி நிறுவனங்கள் உயர்வு

இந்தியாவின் ஒளிமயமான எதிர்காலத்துக்கு, தற்போதுள்ள நமது கல்விக் கொள்கை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பெரும் பங்கு உள்ளது என்பது உங்களுக்கு தெரியும். எனவே சுதந்திரத்தின் இந்த அமுத காலத்தில், நாட்டின் கல்வி உள்கட்டமைப்பாக இருந்தாலும் சரி, கொள்கையாக இருந்தாலும் சரி, நாம் ஒவ்வொரு மட்டத்திலும் வேகமான பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.

உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். மற்றும் எய்ம்ஸ் போன்ற நிறுவனங்கள் கணிசமாக அதிகரித்து வருகின்றன. கடந்த 2014-ம் ஆண்டுக்கு பிறகு மருத்துவ கல்லூரிகளும் 65 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளன. புதிய கல்விக்கொள்கையின் மூலம், நாடு முதன்முறையாக தொலைநோக்கு மற்றும் எதிர்காலத்தை நோக்கிய கல்வி முறையை உருவாக்கி வருகிறது.

அடிமை மனநிலை

நாடு விடுதலை அடைந்தபோது கல்வித்துறையில் இந்தியாவின் பழங்கால பெருமை மற்றும் நமது பெருமையை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் இருந்தது. ஆனால் அடிமை மனநிலையின் அழுத்தம் காரணமாக அந்த பாதையை நோக்கி முந்தைய அரசுகள் இயங்கவில்லை. சில அம்சங்களில் அவர்கள் பின்னோக்கி இயங்கினர்.

இந்த சூழ்நிலையில், மீண்டும் நமது மகான்களும், ஆச்சாரியர்களும் நாட்டிற்கான இந்த கடமையை நிறைவேற்றும் பணியை மேற்கொண்டனர். அதற்கு இந்த சுவாமி நாராயண் குருகுலம் ஒரு வாழும் உதாரணம்.

பாலின சமத்துவம்

‘ஆத்ம தத்துவம்’ முதல் ‘பரமாத்ம தத்துவம்’, ஆன்மிகம் முதல் ஆயுர்வேதம், சமூக அறிவியல் முதல் சூரிய அறிவியல், கணிதம் முதல் உலோகம், பூஜ்ஜியம் முதல் முடிவிலி வரை என பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி செய்து உலகிற்கு வழிகாட்டியது இந்தியா. ‘பாலின சமத்துவம்’ என்ற சொல் பிறக்காத நேரத்தில், பெண் அறிஞர்கள், ஆண்களுடன் விவாதம் செய்தனர்.

அந்த இருண்ட காலங்களில் இந்தியா மனிதகுலத்திற்கு ஒளியைக் காட்டியது, நவீன உலகம் மற்றும் நவீன அறிவியலின் பயணத்தின் கதிர்களை வழங்கியது.

கார்கி, மைத்ரேயி போன்ற பெண் அறிஞர்கள் விவாதங்களில் பங்கேற்பதற்கு அந்த கால குருகுலங்கள் வழிகாட்டின. பேரரசுகள், அரச குலங்கள் என பிற நாடுகள் அடையாளம் காணப்பட்டபோது, இந்தியா தனது குருகுலங்களால் அறியப்பட்டது.

உலகளாவிய மகிமை

நமது குருகுலங்கள் பல நூற்றாண்டுகளாக சமத்துவம், பாசம் மற்றும் சேவையின் தோட்டம் போல இருந்து வருகின்றன. நாளந்தா மற்றும் தட்சஷிலா போன்ற பல்கலைக்கழகங்கள் இந்தியாவின் இந்த குருகுல பாரம்பரியத்தின் உலகளாவிய மகிமைக்கு ஒத்ததாக இருந்தன.

கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி போன்றவை இந்தியாவின் வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக இருந்தன. இன்று, நாட்டில் நாம் காணும் பன்முகத்தன்மை மற்றும் கலாசார செழிப்பு போன்றவை அதே கண்டுபிடிப்புகளின் விளைவாகும்.

சிறந்த கல்வி முறையில் வளர்க்கப்படும் சிறந்த குடிமக்களும், இளைஞர்களும், 2047-ல் இந்தியா சுதந்திர நூற்றாண்டைக் கொண்டாடும் போது, வளர்ந்த இந்தியாவின் கனவை நனவாக்கப் பாடுபடுவார்கள்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.