சென்னை: “அரசு கொள்முதல் செய்யாததால், கரும்பு விவசாயிகள் போராடி வருகின்றனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 7 ஆண்டு காலமாக தொடர்ந்து பொங்கல் பண்டிகையின்போது, விவசாயிகளிடமிருந்து கரும்பை வாங்கி ரேஷன் கார்டுக்கு கரும்பு வழங்கியிருக்கிறோம். அதை இந்த திமுக அரசாங்கம் செய்யவில்லை” என்று வி.கே.சசிகலா விமர்சித்துள்ளார்.
முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் 35-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் வி.கே.சசிகலா மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அதிமுக தனிப்பட்ட ஒருவருக்குச் சொந்தமான இயக்கம் அல்ல. மறைந்த தலைவர் எம்ஜிஆர் ஆரம்பித்த இந்த இயக்கத்தை யாரும் அவ்வாறு கூறமுடியாது. வேறு எந்த கட்சியிலும் இல்லாத வகையில் அவர் ஏற்படுத்திய விதிகளின்படி, தொண்டர்களின் முடிவுதான் இறுதியானது.
ஓபிஎஸ், இபிஎஸ் இடையிலான பிரச்சினை வேறு. என்னைப் பொறுத்தவரை, கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து என்னை நீக்கியதை எதிர்த்து நான் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கட்சியின் தொண்டர்களின் விருப்பம் எதுவோ அதுதான் வெற்றி பெறும்.
ஊடகவியலாளர்கள் அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தைப் பற்றி மட்டுமே கேட்கிறீர்களே? பொதுமக்கள் பிரச்சினைகள் குறித்து கேள்வி கேட்கமாட்டீர்களா? தமிழகத்தில் இன்று விவசாயிகள் கரும்பைக் கொடுக்க முடியாமல், விவசாயிகள் சாலைகளில் நின்று போராடிக் கொண்டுள்ளனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், 7 ஆண்டு காலமாக தொடர்ந்து பொங்கல் பண்டிகையின்போது, விவசாயிகளிடமிருந்து கரும்பை வாங்கி ரேஷன் கார்டுக்கு ஒரு கரும்பு வழங்கியிருக்கிறோம். அதை இந்த திமுக அரசாங்கம் செய்யவில்லை. அதுகுறித்து நீங்கள் கேள்வி கேட்கவே பயப்படுகிறீர்களே? அதுபற்றி நான் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.
திருநெல்வேலி பகுதிகளில் ஆவின் பால் அட்டைகள் மக்களுக்கு வழங்கப்படவில்லை. ஆனால், இனிப்புகள் விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கெனவே இனிப்பு விற்பனைக் கடைகளை தனியார் நடத்துகின்றனர். அதிமுக ஆட்சிக் காலத்தில் கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு மாடுகள் வழங்கி, அதன்மூலம் பால் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், இன்று ஆவின் மூடப்பட்டு வருகிறது. எனவே தமிழக அரசு ஒன்றிய அளவில் ஆட்களைத் தேர்வு செய்து, மாடுகள் வாங்க கடன உதவி செய்து, ஆவினில் பால் உற்பத்தியைப் பெருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.