மாஸ்கோ,ரஷ்யாவில் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்த முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர்; காயம் அடைந்த ஆறு பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ரஷ்யாவின் சைபீரியா நகரில் உள்ள கெமரோவோ என்ற இடத்தில், முதியோர் இல்லம் நடத்தப்படுகிறது. இந்த இல்லம் அரசிடம் பதிவு செய்யப்படாமல் சட்டவிரோதமாக நடத்தப்பட்டுள்ளது.
மரத்தாலான இரண்டு மாடிகள் கொண்ட இந்த இல்லத்தில், நேற்று காலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. உள்ளே தங்கியிருந்த முதியோர்களில் 22 பேர் தப்பிக்க வழியின்றி உடல் கருகி உயிரிழந்தனர். பலத்த காயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்ட ஆறு பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த விபத்து குறித்து விசாரணை நடத்திய போலீசார், சட்டவிரோதமாக முதியோர் இல்லம் நடத்திய பாதிரியாரை கைது செய்துள்ளனர். மேலும், ரஷ்யாவின் பல பகுதிகளில் அனுமதி பெறாமல் பலர் முதியோர் இல்லம் நடத்தி வருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement