சென்னை: “வல்லபாய் படேலுக்கு ரூ.3 ஆயிரம் கோடியில் சிலை வைத்ததற்கும், ஐயா பெரியாருக்கு ரூ.100 கோடியில் சிலை வைப்பதற்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்?” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
பெரியாரின் 49-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், பெரியாரிய கருத்தியலில் எங்கிருந்து அந்நியப்படுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பபப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “திராவிடக் கோட்பாடு என்பதை நாங்கள் எதிர்க்கிறோம். திராவிடம் என்பது தமிழர்கள் அல்லாதோர் வசதியாக வாழ்வதற்கும், ஆள்வதற்கும் கொண்டுவரப்பட்ட ஒன்று என்பது புரிந்ததில் இருந்து, எங்கள் இனத்தில் சாவில் இருந்து எங்களுக்கு அறிவு வருகிறது.
இன்று தமிழக அமைச்சரவையில் தெலுங்கை தாய்மொழியாக கொண்ட 9 அமைச்சர்கள் உள்ளனர். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது எங்களுக்கு இந்த முன்னுரிமை, இவ்வளவு பெரிய அங்கீகாரம், இத்தனை பெரிய ஜனநாயகம் கொண்ட ஒரு தேசிய இனத்தை எங்காவது பார்த்தது உண்டா? இதையெல்லாம் பார்க்கும்போது, இன்னும் விஜயநகரப் பேரரசுதான் ஆட்சி செய்து வருகிறது என்ற கருத்துதானே வருகிறது” என்றார்.
பெரியாருக்கு நூறு கோடி ரூபாயில் சிலை வைப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “பெரியாரின் கருத்தியலை முதலில் மக்களிடம் பரப்ப வேண்டும். அவருடைய கருத்தியலைப் பரப்ப திராவிடம் என்ற பெயர் தேவையில்லை. அவருடைய கருத்தியல் நிறைய உள்ளன. நானே 15 ஆண்டுகள் பேசியிருக்கிறேன். வல்லபாய் படேலுக்கு 3 ஆயிரம் கோடி ரூபாயில் சிலை வைத்ததற்கும், ஐயா பெரியாருக்கு ரூ.100 கோடியில் சிலை வைப்பதற்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்.
தன்மீது வீசப்பட்ட செருப்புகள், பெயர் வைத்தால் காசு, படம் எடுத்தால் காசு, வீட்டிற்கு சாப்பிட வந்தால் காசு என்று வசூலித்து அவற்றை சேமித்து, பள்ளிக்கூடங்களைக் கட்டியவர் பெரியர். அப்படி சேர்த்த பணத்தில் வந்தததுதான் பெரியார் திடல் என்ற அறக்கட்டளை. அத்தகைய எளிய மகனுக்கு நீங்கள் ரூ.100 கோடியில் சிலை வைத்தால், அந்த தடியால் அடித்தே உங்களைக் கொன்றுவிடுவார்” என்று அவர் கூறினார்.