தமிழக அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணி பெண்கள் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் பெரும்பாலான கர்ப்பிணிகள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இந்த நிலையில் அனைத்து பெண்களுக்கும் எடுத்துக்காட்டாக இருக்கும் நோக்கத்தோடு அரசு மருத்துவமனைகளில் நம்பிக்கையுடன் சிகிச்சை பெற வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்க வேண்டும் என ஒரு அரசு மருத்துவர் முடிவு எடுத்தார்.
சேலம் மாவட்டத்தை அடுத்த ஆத்தூர் கெங்கவல்லி அருகே உள்ள கூடமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 5 ஆண்டுகளாக மருத்துவராக பணியாற்றி வருபவர் ஹர்ஷிதா. இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையை சேர்ந்த மருத்துவர் புகழ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தற்போது கர்ப்பிணியாக இருந்த ஹர்ஷிதா தான் பணியாற்றும் அதே ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடர்ந்து பிரவ கால பரிசோதனை மற்றும் சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி ஹர்ஷிதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் அவர் பணியாற்றிய ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு 21ஆம் தேதி சுக பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. தற்பொழுது தாயும் சேயும் நலமாக உள்ளனர். அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் முறையான சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் சிகிச்சை பெற்றுக் கொண்ட மருத்துவரின் இத்தகைய செயலை பொதுமக்களும் சுகாதாரத் துறை அதிகாரிகளும் பாராட்டி வருகின்றனர்.