பஹ்ரைச்: உத்தர பிரதேச மாநிலம் பஹ்ரைச் அடுத்த ஜிகானியா கிராமத்தைச் சேர்ந்த தோத்தாராம் சவுஹானின் மகள் அஞ்சனி (12). இவர், கிராம மக்களுடன் சேர்ந்து ஆடு மேய்ப்பதற்காக அருகிலுள்ள சாக்கியா வனப்பகுதிக்கு சென்றார். அப்போது சரயு கால்வாயில் தண்ணீர் அருந்த சென்ற அஞ்சனியை, அப்பகுதியில் சுற்றித் திரிந்த புலி சிறுமியை தாக்கி கொன்றது. பின்னர் அவரது சடலத்தை காட்டுக்குள் இழுத்து சென்றது. தகவலறிந்த வனத்துறையினர், மோதிபூர் போலீசார், வனப்பகுதிக்குள் சென்ற சிறுமியின் சடலத்தை கைப்பற்ற முயன்றனர்.
அப்போது சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமார் 700 மீட்டர் தொலைவில் சிதைக்கப்பட்ட சிறுமியின் உடலை மீட்டனர். அதனை பிரேத பரிசோதனைக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரி பிரதீப் சிங் கூறுகையில், ‘பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே, இறந்த சிறுமியின் குடும்பத்திற்கு நிவாரண நிதியுதவி வழங்கப்படும்’ என்றார்.