தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சிவகங்கை மாவட்டத்திற்கு நேற்று சுற்று பயணம் மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாக காரைக்குடியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம் தொடக்க நிகழ்ச்சி மற்றும் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றார்.
இதனை ஒட்டி சிவகங்கை மாவட்ட திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலினை வரவேற்கும் விதமாக சாலையின் இருபுறமும் திமுக கொடிக்கம்பங்கள் நடப்பட்டது. உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சி முடிந்ததும் நள்ளிரவு நேரத்தில் சாலையில் நடப்பட்டிருந்த திமுக கொடிக்கம்பங்களை ஊழியர்கள் அகற்றினர். அப்பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி நாமக்கல்லைச் சேர்ந்த ஊழியர் வீரமலை என்பவர் உயிரிழந்துள்ளார். உதயநிதி ஸ்டாலினுக்காக நடப்பட்ட திமுக கொடிக்கம்பம் அகற்றிய போது ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.