ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சாலமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித் (30), தொழிலாளி. இவர் சாமல்பட்டி அருகே உள்ள கொல்லப்பட்டி கிராமத்தில் உள்ள மாந்தோப்பிற்கு பன்றி வேட்டைக்காக செல்வது வழக்கம். அங்கு மின் வயரில் திருட்டுத்தனமாக மின் இணைப்பு எடுத்து வளை போடுவாராம். மறுநாள் காலை வளையில் பன்றி அல்லது ஏதேனும் சிக்கினால் அதை எடுத்து செல்வாராம்.
இதேபோல், நேற்று முன்தினம் இரவும், பன்றி வேட்டைக்காக சென்றுள்ளார். அங்கிருந்த மின் கம்பியில் வயரை போட முயன்றபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் கம்பியை பிடித்தவாறு சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். தகவலறிந்த சாமல்பட்டி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, அவரது சடலத்தை கைப்பற்றி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.