
எனக்கும் அரசியலுக்கும் துளியளவும் சம்மந்தம் இல்லை: திரிஷா
எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி, வலியவன் படங்களை இயக்கிய எம்.சரவணன் அடுத்ததாக திரிஷா நடிப்பில் ‛ராங்கி' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் நிறைய சர்ச்சை காட்சிகள் இருப்பதாக ஆட்சேபம் தெரிவித்து தணிக்கை குழு அனுமதி வழங்க மறுத்துவிட்டனர். அதன்பின் மேல்முறையீட்டில் படத்தில் 30 காட்சிகளை நீக்கி விட்டு தணிக்கை குழு 'யுஏ' சான்றிதழ் வழங்கியது. சில தினங்களுக்கு முன்பு 'ராங்கி' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி வைரலானது. இப்படம் வருகிற டிசம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் 'ராங்கி' படத்தின் புரமோஷன் பணிக்காக திரிஷா உள்ளிட்ட படக்குழு செய்தியாளர்களை சந்தித்தனர். அதில் திரிஷா பேசியதாவது: நான் திரைக்கு வந்து 20 வருடங்கள் ஆகிறது, நான் எப்போதும், நேர்மறையான கருத்துக்களை மட்டுமே எடுத்துக்கொள்வேன், எதிர்மறையான கருத்துக்கள் எதையும் நான் கவனித்துக் கொள்வதில்லை. காங்கிரஸ் கட்சியில் இணையப்போவதாக வதந்திகள் கிளப்பியுள்ளனர். அந்த தகவல்கள் ஒரு சதவீதம் கூட உண்மையில்லாதவை, எனக்கும் அரசியலுக்கும் துளியளவும் சம்மந்தம் இல்லை. என்னிடம் எப்போது திருமணம், உங்களுக்கு பிடித்த நடிகர் யார் இது போன்ற கேள்விகளை தவிர்ப்பது நல்லது. இவ்வாறு அவர் பேசினார்.