சென்னை: வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை கண்டறிய, மேலும் ஒரு புதிய மோப்ப நாய், சென்னை விமான நிலைய சுங்கத் துறையில் சேர்க்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறையினர் மேற்கொள்ளும் சோதனைகளில் உதவி செய்வதற்காக, பயிற்சி பெற்ற மோப்ப நாய்கள் பிரிவு கடந்த 2021 டிசம்பரில் தொடங்கப்பட்டது.
நாட்டின் பல்வேறு பாதுகாப்பு பிரிவுகளில் பயன்படுத்தப்படும் மோப்ப நாய்களுக்கு பஞ்சாப் மாநிலம் அட்டாரி பகுதியில் உள்ள பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அங்கிருந்து சென்னை விமான நிலைய சுங்கத் துறைக்கு ஓரியோ, ஆர்லி என்ற பயிற்சி பெற்ற 2 மோப்ப நாய்கள் கடந்த டிசம்பரில் வந்தன. பிறந்த 2-வது மாதத்தில் இருந்து பயிற்சி பெறத் தொடங்கி, 10 மாதப் பயிற்சியை முடித்த இந்த 2 நாய்களுக்கும் தற்போது 2 வயது நிறைவடைந்துள்ளது.
இதில் ‘ஓரியோ’, போதை பொருட்களை மோப்பம் பிடித்து அடையாளம் காட்டுகிறது. ‘ஆர்லி’, வெடிபொருட்கள் போன்ற அபாயகரமான பொருட்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுகிறது.
இந்த நிலையில், வெளிநாடுகளில் இருந்து தங்கம், மின்சாதனங்கள், போதை பொருட்கள் அதிக அளவில் கடத்தி வரப்படுவதால், சென்னை விமான நிலைய சுங்கத் துறையின் மோப்ப நாய் பிரிவில் மேலும் ஒரு மோப்ப நாயை சேர்க்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, அட்டாரி பயிற்சி மையத்தில் 10 மாதப் பயிற்சியை முடித்த ‘இரினா’ என்ற ஒரு வயது நாய் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம், சென்னை விமான நிலைய மோப்ப நாய் பிரிவில் மோப்ப நாய்கள் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
புகையிலை பொருட்களை கண்டுபிடிப்பதில் சிறப்பு பயிற்சி பெற்ற ‘இரினா’, சென்னை விமான நிலையத்தில் தனது பணியை வரும் ஜனவரியில் தொடங்க உள்ளது. எனவே, வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் சிகரெட் பார்சல்கள், போதை மாத்திரைகள், பதப்படுத்தப்பட்ட உயர் ரக கஞ்சா போன்றவை இனிமேல் அதிக அளவில் கைப்பற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘இரினா’ என்ற ஒரு வயது நாய் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே சென்னை விமான நிலையத்தில் மோப்ப நாய்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.