“கணவருக்கு மூடு வர்றதுக்காக இதைச் செய்யாதீங்க…'' – காமத்துக்கு மரியாதை | S 3 E 22

காமத்துக்கு மரியாதை தொடரின் இந்த மூன்றாவது சீசனில், வாசகர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு சொல்லிக் கொண்டிருக்கிற மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி, இந்த வாரம் `கணவரின் விருப்பத்துக்காக தங்கள் நிறத்தை மாற்ற முயன்ற பெண்களுக்கு நடந்த துன்பம் பற்றி’ பகிர்ந்து கொண்டார்.

Dr. Narayana Reddy

“என்னுடைய கிளினிக்கிற்கு அவ்வப்போது சில நடுத்தர வயதுப் பெண்கள் ‘முகமெல்லாம் வீங்கி’, ‘முகத்தில் ஆங்காங்கே வெள்ளைத் திட்டுகள்’ என்று முகம் தொடர்பான ஏதேனும் ஒரு பிரச்னையுடன் வருவார்கள். நான் சரும மருத்துவர் இல்லையென்றாலும், தேடி வருகிற பேஷன்ட்ஸுக்கு ஆலோசனை வழங்க வேண்டுமென்கிற அடிப்படையில் பேசுவேன். `என்னம்மா ஆச்சு’ என்றால், `நீ கலரா இல்ல; உன்கிட்ட தாம்பத்திய உறவு வெச்சுக்க மூடே வர மாட்டேங்குதுன்னு வீட்டுக்காரர் திட்டுறார் டாக்டர். வேற வழியில்லாம கடைகள்ல விக்கிற க்ரீமையெல்லாம் வாங்கிப் பயன்படுத்தினேன். இப்படியாயிடுச்சு’ என்று அழுவார்கள்.

கவனியுங்கள், இந்தப் பெண்களுக்குத் திருமணமாகி பல வருடங்களாகி விட்டன. இவர்களுடன் குடும்பம் நடத்தி, குழந்தைபெற்று வாழ்ந்துகொண்டிருக்கிற கணவர்களுக்கு திடீரென என்னவாகிறது என்பது புரியவில்லை. நிறத்துக்கும் அழகுக்கும் தொடர்பு கிடையாது. அந்தந்த இடத்தின் தட்பவெப்ப நிலையைப் பொறுத்து மனிதர்களின் சரும நிறம் வித்தியாசப்படும். குறிப்பாக, தென்னிந்தியாவில், வெயில் காலம்தான் அதிகம். பனிக்காலத்தில் குளிரும் என்றாலும், பனிப்பொழிவெல்லாம் கிடையாது. அதிகப்படியான வெயிலிலிருந்து நம் சருமத்தைக் காக்க, நம்முடைய உடலானது மெலனின் என்கிற நிறமியை அதிகமாக உற்பத்தி செய்கிறது. இதனால்தான், வெயில் கொளுத்தினாலும் ஸ்கின் கேன்சர் வராமல் நாமெல்லாம் தப்பித்துக் கொண்டிருக்கிறோம். இந்த ஞானம் ஆண்களுக்கு வேண்டும். கூடவே, `நாம என்ன நிறத்துல இருக்கோம்; நம்மளைப் பார்த்தா மனைவிக்கு மூடு வருமா’ என்கிற தெளிவும் வேண்டும்.

sex education

மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டீர்களென்றால், அவர்கள் முகம் தெளிவாக இருக்கும்; களையாக இருக்கும்… கணவனுக்குத் தூண்டுதல் கிடைக்க, மனைவியின் மகிழ்ச்சியான முகம் போதும். பெண்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். உங்கள் நிறம் குறித்து கணவர் விமர்சனம் செய்தாலும், ‘க்ரீம் போட்டாவது கலராகிடணும்’ என்ற முடிவுக்கு வராதீர்கள். அவற்றில் இருக்கிற Hydroquinone என்ற ரசாயனம் உங்கள் முகஅழகையே போக்கி விடலாம். கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்னதுபோல, முகம் வீங்குதல், வெள்ளைத் திட்டுகள் போன்ற வேறு சில பிரச்னைகள் வரலாம்” என்கிறார் டாக்டர் நாராயண ரெட்டி.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.