காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த விச்சந்தங்கல் கிராமத்தில் பட்டுவளர்ச்சித் துறையின் பயிற்சி மையம் 8 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு, பட்டுப்புழு வளர்ப்பு மையம் மற்றும் மல்பெரி நாற்றங்கால் உற்பத்தி செய்யும் தோட்டமும் உள்ளன.
பட்டுப்புழு வளர்ப்பில் ஆர்வம் காட்டும் விவசாயிகளுக்கு, இதுதொடர்பாக செயல்முறையுடன் கூடிய பயிற்சி இங்கு வழங்கப்பட்டு வந்தது. இதனால் கடந்த 2015-ம் ஆண்டு பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் மல்பெரி இலை உற்பத்தியில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். ஆனால், தற்போது இந்த பண்ணையில் பட்டுப்புழு வளர்ப்பு மையம் செயல்படாமல் உள்ளது. இதனால் பட்டுப்புழு விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, ஏற்கெனவே பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்ட விவசாயிகள் சிலர் கூறியதாவது: பட்டுப்புழுவின் 100 முட்டைகள் அரசு பண்ணையில் ரூ.300-க்கும் தனியார் பண்ணையில் ரூ.1,500-க்கும் விற்கப்படுகிறது. இந்த முட்டைகளில் குஞ்சு பொறிக்கும் பட்டுப்புழுவை வளர்க்க சீரான சீதோஷ்ண நிலை தேவைப்படுவதால், அரசு பண்ணையிலேயே வளர்த்து தருகிறார்கள்.
குஞ்சு பொறித்து 10 நாள் புழுவாக கிடைக்கும். இவற்றை நன்கு பராமரித்து வளர்க்க வேண்டும். 21 நாளுக்குப் பிறகு பட்டுக்கூடு கட்ட தொடங்கும். 25-ம் நாள் கூடுகளை பிரித்தெடுக்க வேண்டும். நல்ல தரமான மல்பெரி இலைகளை புழுக்களுக்கு உணவாக அளித்தால் 100 புழுக்களுக்கு, சராசரியாக 70 கிலோ பட்டுக்கூடு கிடைக்கும்.
பட்டுப் புழுக்களுக்கு உணவான மல்பெரி இலைகளை வளர்ப்பதற்காக, அரசு பண்ணையில் ஒரு நாற்றங்கால் ரூ.1-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 ஏக்கரில் 5 ஆயிரம் நாற்றங்கால் நடவு செய்யலாம். நடவு, களையெடுத்தல், நாற்றங்கால் மற்றும் கூலியை கணக்கிட்டால் ஒரு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவாகும். இதில், அரசு மானியாக ரூ.10,500 வழங்கப்படுகிறது. அனைத்து செலவுகளும் போக மாதம் ரூ.20 முதல் 25 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும்.
ஆனால், விச்சந்தாங்கல் பண்ணையில் தற்போது செயல்முறையுடன் கூடிய பட்டுப்புழு வளர்ப்பு மையம் இயங்காமல் உள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகளின் மானிய திட்டங்களை தெளிவுபடுத்தி விவசாயிகளுக்கு உரிய பயிற்சிகளை நேரடியாக வழங்க வேண்டும். இவ்வாறு கூறினர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பட்டுவளர்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.