திருப்பத்தூர் அருகே காலாவதியான பொருட்களுடன் உரிய ரசீது வழங்காமல் இயங்கி வந்த கடைக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடையில் இருந்த பொருட்களை பறிமுதல் செய்து கடைக்கு சீல் வைத்துள்ளனர். வாணியம்பாடி பஜார் பகுதியில் கிறிஸ்மஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அவ்வாறு அமைக்கப்பட்ட ஒரு கடையில் விழா கால தள்ளுபடி என்று ஒவ்வொரு பொருட்களின் மீதும் 40 சதவீதம் தள்ளுபடி என விளம்பரம் செய்து விற்பனை செய்து வந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த வணிகர் சங்கத்தினர் அங்கு சென்று இவ்வளவு தள்ளுபடி கொடுக்க என்ன காரணம் என்ன விசாரித்தவாறு பொருட்களை சோதனை செய்துள்ளனர்.
வணிகர் சங்கத்தினர் நடத்திய சோதனையில் அனைத்து பொருட்களும் காலாவதியாகி மூன்று மாதத்திற்கு மேல் ஆனது தெரியவந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வணிகர் சங்கத்தினர் அந்தக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து தகவல் அறிந்த நகராட்சி ஊழியர்கள் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடையில் இருந்த காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்து கடைக்கு சீல் வைத்தனர்.
இந்த சம்பவம் வாணியம்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. தற்பொழுது விழா காலம் என்பதால் தள்ளுபடி பொருட்கள் வாங்கும் பொழுது காலாவதியாகும் தேதியை சரிபார்த்து வாங்குமாறு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.