கிறிஸ்துமஸ் பண்டிகை: ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து!

கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இயேசு கிறிஸ்து பிறப்பை கொண்டாடும் இந்நாளை, மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். கிறிஸ்தவ பெருமக்கள் அனைவரும், தேவாலயங்களில் நள்ளிரவில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் பங்கேற்று சிறப்பு பிரார்த்தனை செய்தனர். கிறிஸ்துமஸை ஒட்டி நாடு முழுவதும் உள்ள அனைத்து தேவாலயங்களும் மின்னொலியில் ஜொலித்தன.

இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

கிறிஸ்துமஸ் பண்டிகை மொத்த மனிதகுலத்திற்கும் அமைதி மற்றும் சகோதரத்துவத்தின் சின்னமாக விளங்குகிறது. இந்த நாளில் இயேசு கிறிஸ்துவின் இரக்கம் மற்றும் தியாகத்தின் முக்கியத்துவத்தை நாம் நினைவுகூருவோம். கிறிஸ்துமஸ் பண்டிகை ஒருவரையொருவர் அன்புடனும், கருணையுடனும் நடத்த வழி காட்டுகிறது.

இயேசு கிறிஸ்துவின் போதனைகளை நம் வாழ்வில் ஏற்றுக்கொள்ள உறுதிமொழி எடுப்போம். நாட்டு மக்கள் அனைவருக்கும், குறிப்பாக கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறி உள்ளதாவது:

சமூகத்தில் நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சி மேலும் அதிகரிக்கட்டும்; கிறிஸ்துவின் உன்னத எண்ணங்களையும், அவர் ஆற்றிய சேவையையும் நினைவு கூர்வோம்; கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.

தமிழக முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின்
வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “அன்பின் பேரொளியாய் அவனியை நிறைத்த இயேசுபிரான் பிறந்த திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.

அமைதியும் அன்பும் நிலைத்த சமத்துவ உலகம் பிறந்திட இயேசு கிறித்துவின் நன்னெறிகள் நமக்கு வழிகாட்டட்டும்!” என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.