புதுடெல்லி: கொரோனா தொற்று மீண்டும் பல நாடுகளில் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல், கைகளை சுத்தம் செய்தல் போன்ற தொற்று தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடித்தால் பண்டிகை கொண்டாட்டம் வைரசால் பாதிக்கப்படாமல் இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். சீனாவில் கொரோனா தொற்று திடீரென அதிகரித்துள்ளது. தினமும் கோடிக்கணக்கானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதால், அந்நாட்டின் பல மருத்துவமனைகளிலும் மக்கள் சிகிச்சைக்காக குவிகின்றனர். இதனால் மருத்துவமனைகள் நிரம்பி, படுக்கை இல்லாமல் தரையில் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும், கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்கள் துணியால் மூடி வரிசையாக குவிக்கப்பட்டுள்ள வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பீதியை கிளப்பி வருகின்றன. இதன் காரணமாக, இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொற்று பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒன்றிய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. குறிப்பாக, சீனா, ஜப்பான் உள்ளிட்ட 5 நாடுகளில் இருந்து இந்தியா வரும் அனைத்து பயணிகளிடமும் பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆண்டின் கடைசி ‘மன் கி பாத்’வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று உரையாற்றிய போது கூறியதாவது: 2022ம் ஆண்டு இந்தியாவுக்கு உத்வேகம் அளிக்கும் அற்புதமான ஆண்டாக அமைந்தது.
இந்த ஆண்டில்தான் உலகின் 5வது பெரிய பொருளாதார நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. 220 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு நம்ப முடியாத சாதனை படைக்கப்பட்டது. ரூ.32 லட்சம் கோடி எனும் மாயாஜாலஏற்றுமதி எண்ணிக்கையை தாண்டி உள்ளோம். தற்சார்பு இந்தியா என்ற தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு, முதல் உள்நாட்டு விமானம் தாங்கிய கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் உருவாக்கப்பட்டது. விண்வெளி, ஆளில்லா விமானம் மற்றும் பாதுகாப்பு துறைகளிலும் இந்த ஆண்டில் பெருமைகள் பல படைக்கப்பட்டுள்ளன. விளையாட்டு துறையிலும் நமது இளைஞர்கள் அபாரமான திறனை வெளிப்படுத்தினர். இந்த ஆண்டில்தான், நாடு தனது 75வது சுதந்திர தின ஆண்டை நிறைவு செய்துள்ளது.
ஒரே இந்தியா மகத்தான இந்தியா என்ற உணர்வை விரிவுபடுத்தும் வகையில், குஜராத்தில் மாதவ்பூர் மேளாவும் வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் விழாவும் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளன. ஆகஸ்ட் மாதத்தில் நடந்த ‘ஹர் கர் திரங்கா’ பிரசாரத்தை யாரும் மறக்க முடியாது. 6 கோடிக்கும் அதிகமான மக்கள் தேசிய கொடியுடன் செல்பி எடுத்து வெளியிட்டனர். ஜி20 குழுவின் தலைமைப் பதவியை பெற்று இந்தியா ஏற்றுள்ளது. யோகா, ஆயுர்வேதம் ஆகியவை உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. அமெரிக்காவில் நடந்த டாடா மெமோரியல் அமைப்பின் ஆராய்ச்சியில், தொடர்ந்து யோகா செய்தால் மார்பக புற்றுநோயிலிருந்து மீண்டும் வரலாம் என்றும் இறப்புக்கான வாய்ப்பு 15 சதவீதம் குறைந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
மொத்தத்தில், இந்த ஆண்டு நாடு ஒரு புதிய வேகத்தைப் பெற்றுள்ளது. அனைவருக்கும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதே சமயம், தற்போது உலகின் பல நாடுகளிலும் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே பண்டிகைகளை கொண்டாடும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அனைவரும் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் மற்றும் கைகளை சுத்தம் செய்தல் போன்ற நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். இதன் மூலம் உங்களின் பண்டிகை கொண்டாட்டம் வைரசால் பாதிக்கப்படாமல் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
தினசரி பாதிப்பு தகவல் சீனா வெளியிட மறுப்பு
சீனாவில் கடந்த 20 நாட்களில் 24 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், தினசரி சுமார் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருவதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இன்னும் ஓரிரு மாதத்தில் நிலைமை மோசமடைந்து பாதிப்பு உச்சகட்டத்தை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சீன தேசிய சுகாதார ஆணையம் நேற்று முதல் கொரோனா தினசரி பாதிப்பு தகவலை வெளியிட மாட்டோம் என அறிவித்துள்ளது.
இனி சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தான் கொரோனா எண்ணிக்கையை வெளியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது எப்போது தொடங்கும் என்ற தகவல் வெளியாகவில்லை. இதுவரையிலும் சீன அரசு பாதிப்பு எண்ணிக்கையை மிகவும் குறைத்து காட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.
வீரியமிக்க வைரஸ் உருவாகும் வாய்ப்பு
சீனாவில் தற்போது பெரும்பாலும் ஒமிக்ரான் வகை வைரசால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். தினமும் அங்கு ஒரு கோடி பேருக்கு தொற்று பாதிக்கும் நிலையில், வீரியமிக்க புதிய வகை வைரஸ் உருவாக வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ‘‘சீனாவில் மக்கள் தொகை அதிகம். அதோடு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது. இதனால், ஒமிக்ரானில் வீரியமிக்க புதிய வகையோ அல்லது வேறு விதமான புதிய வகை உருமாற்ற வைரசோ உருவாக அதிகமான வாய்ப்புகள் உள்ளன’’ என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் நிபுணர் டாக்டர் ஸ்டூவர்ட் காம்பெல் ரே கூறியுள்ளார்.
* சீனாவில் இருந்து வந்தவருக்கு தொற்று
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த 40 வயது நபர் சீனாவிலிருந்து நேற்று நாடு திரும்பினார். ஆக்ரா விமான நிலையம் வந்த அவரிடம் அதிகாரிகள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அவரது சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் எந்த வகை கொரோனா தொற்று பாதித்துள்ளது என்பது கண்டறியப்படும். தொற்று பாதித்த நபருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லாததால் அவர் வீட்டு தனிமையில் வைத்து கண்காணிக்கப்படுகிறார்.