கொரோனா தடுப்பு நடவடிக்கை; `ஒத்திகை பயிற்சிகள் மேற்கொள்ளுங்கள்'- மாநிலங்களை அறிவுறுத்திய மத்திய அரசு

கொரோனா நோய்த்தொற்று பரவல் தணிந்து உலக அளவில் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இந்தச் சூழலில், கொரோனா முதன் முதலாகக் கண்டறியப்பட்ட சீனா உட்பட சில நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பது உலக மக்களை சற்றே அச்சமடையச் செய்திருக்கிறது.

இந்த நிலையில், உலகளாவிய கொரோனா பரவல் அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, வரும் செவ்வாய்க்கிழமை (27-ம் தேதி) முதல் இந்தியாவிலுள்ள சுகாதார நிலையங்களில் `ஒத்திகைப் பயிற்சிகள்’ (Mock Drills – பேரிடர் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பயிற்சிகள்) மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக மருத்துவ பராமரிப்பு தேவைகளைப் பூர்த்தி செய்ய, நாட்டின் சுகாதார கட்டமைப்புகளின் நிலையை உறுதி செய்வதற்கான நடவடிக்கையாக மத்திய அரசு இதனை முன்னெடுத்திருக்கிறது.

கொரோனா

எனவே வரும் 27-ம் தேதி இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இந்த ஒத்திகைப் பயிற்சிகளை மேற்கொள்ளும் எனக் கூறப்படுகிறது.

மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் மற்றும் செயல்பாட்டு உயிர் ஆதரவு உபகரணங்கள் கிடைப்பதை உறுதி செய்யுமாறும், எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள சிலிண்டர்கள் போதுமான அளவு இருப்பு வைத்திருப்பதையும் உறுதி செய்யுமாறும் மாநில சுகாதார மையங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

RT-PCR

சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் சீனா, தென் கொரியா, ஜப்பான், தாய்லாந்து மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியா வரும் சர்வதேச பயணிகளுக்கு RT-PCR சோதனையை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. பொதுமக்கள் முகக்கவசங்களை அணியவும், நெரிசலான இடங்களில் பயணத்தைத் தவிர்க்கவும், கொரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்றவும் மத்திய அரசு வலியுறுத்தியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.