மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள காரமடை கட்டாஞ்சி மலையில் உள்ள தண்டி பொருமாள் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். நேற்று முன்தினம் இரவு இந்த கோயிலுக்குள் புகுந்த 4 காட்டு யானைகள், அங்கிருந்த அன்னதானம் மற்றும் பிரசாதம் தயாரிக்க வைத்திருந்த அரிசி, பருப்பு, வெல்லம் உள்ளிட்ட மளிகை பொருட்களை தின்றன.
பின்னர், வேறு ஒரு அறையின் கதவை உடைத்து உணவுப்பொருட்களை தேடின. தொடர்ந்து, கோயிலின் மூலவர் அறை முன்புறம் கட்டியிருந்த வாழை மரங்களை தின்று தீர்த்து வனப்பகுதிக்குள் சென்று மறைந்தன. நேற்று அதிகாலை வழக்கம்போல் வந்த பூசாரி கோயில் சூறையாடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்த வனத்துறை மற்றும் போலீசார், கோயிலில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.