கோவை: கோவையில் கரோனா தொற்று அதிகரித்தால் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான அளவு படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சீனா, பிரேசில், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கரோனா தொற்று மீண்டும் அதிகளவில் பரவி வருகிறது. இந்தியாவில் ஒடிசா, குஜராத் ஆகிய மாநிலங்களில் புதிய ஒமிக்ரான் தொற்று உள்ளவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக கோவை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கோவையில் இதுவரை புதிய வகை கரோனா தொற்று கண்டறியப்படவில்லை.
புதிய வகை கரோனா வேகமாக பரவும் தன்மை கொண்டதாக உள்ளது. இதில், இறப்பு விகிதம் பெரிதாக இருக்காது. எனவே, ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவுவதை தடுக்க முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகளை அவ்வப்போது கழுவுதல், கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்த்தல் போன்றவற்றை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். தற்போது வரை எதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. இருப்பினும், பொதுமக்கள் வெளியே செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும்.
கோவையில் நேற்று முன்தினம் யாரும் கரோனாவால் பாதிக்கப்படவில்லை. மாவட்டத்தில் தினசரி அதிகபட்சம் 2 பேர் மட்டுமே கரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். கோவை மாவட்டம் முழுவதும் அரசு, தனியார் மருத்துவமனைகள் சேர்த்து மொத்தம் சுமார் 12 ஆயிரம் படுக்கை வசதிகள் உள்ளன. ஒருவேளை வரும் நாட்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு இந்த படுக்கைகள் ஒதுக்கப்படும். அதேபோல, நோயாளிகளுக்கு அளிப்பதற்கான ஆக்சிஜன் கட்டமைப்பு வசதியும் நம்மிடம் உள்ளது” என்றனர்.
கோவை அரசு மருத்துவமனை அதிகாரிகள் கூறும்போது, “கோவை அரசு மருத்துவமனையில் தற்போது யாரும் கரோனாவுக்கு சிகிச்சை பெறவில்லை. இருப்பினும், கரோனா நோயாளிகளுக்கான 30 படுக்கைகள் கொண்ட வார்டு உள்ளது. மருத்துவமனையில் சுமார் 1,500 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் இணைப்பு வசதி உள்ளது. தொற்று அதிகரிக்கும்போது அவை கரோனா நோயாளிகளுக்காக பயன்படுத்தப்படும்” என்றனர். கோவை சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனை மருத்துவர்கள் கூறும்போது, “இங்கு கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து வசதிகளும் உள்ளன. தொற்று அதிகரித்தால் அதற்கேற்ப அவை பயன்படுத்தப்படும்”என்றனர்.
கோவை மாவட்டஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கோவை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு நோய் தொற்று பரிசோதனை செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோவைக்கு வரும் பயணிகளில் பொதுவாக 2 சதவீதம் நபர்களுக்கு சளி மாதிரி எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பணிக்காக மருத்துவ அலுவலர், சுகாதார ஆய்வாளர், ஆய்வக நிபுணர் ஆகியோர் கொண்ட 3 குழுக்கள் பணியில் இருந்து கண்காணிக்கும் பணியை 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மேற்கொள்வார்கள்.
நோய் அறிகுறிகளுடன் வந்தால் அவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தும் மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். மற்ற பயணிகள் வீட்டில் தங்களை சுய கண்காணிப்பு செய்து கொள்ள வேண்டும். சுய கண்காணிப்பின் போது நோய் அறிகுறி தெரிய வந்தால், உடனடியாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு 1075 என்ற எண்ணில் தெரிவிக்க வேண்டும்.
வெளிநாட்டிலிருந்து தங்கள் பகுதிக்கு வரும் பயணிகளை கண்காணிக்க வட்டார அளவில் சுகாதார ஆய்வாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டால் அவர்களது மாதிரி மரபணு சோதனைக்காக சென்னையில் உள்ள மாநில பொது சுகாதார ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அச்சம் கொள்ளத் தேவையில்லை. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.