ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் சபரிமலையில் அதிகாலை முதலே கட்டுக்கடங்காத பக்தர்கள் வெள்ளத்தால் திக்கு முக்காடி வருகிறது சபரிமலை.
சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ம் தேதி நடை திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்ட நாளிலிருந்து தொடர்ந்து பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருந்தது. பக்தர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 10 நாட்களுக்கு முன்பிருந்து தினசரி சராசரியாக 90 ஆயிரத்திற்குள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சபரிமலையில் இந்த ஆண்டு மண்டலம் மற்றும் அகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டது முதல் தற்போது வரையிலான 38 நாட்களில் 28 லட்சத்து 58 ஆயிரத்து 410 பேர் தரிசனத்திற்காக முன்பதிவு செய்துள்ளனர். அவர்களில் டிசம்பர் 24ஆம் தேதியான வரை 26 லட்சத்து 476 பேர் தரிசனம் செய்துள்ளனர்.
சபரிமலையில் நேற்று மட்டும் (24.11.22) 91,054 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமையான இன்று (25.12.22) 90,003 பேர் தரிசனத்திற்காக முன்பதிவு செய்துள்ளனர். விடுமுறை நாள் என்பதால் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டது முதல் பக்தர்கள் வெள்ளத்தால் திக்குமுக்காடி வருகிறது சபரிமலை. இருமுடி சுமந்து பதினெட்டாம்படி ஏறும் பக்தர்களை போலீசார் சிரமம் கொண்டு கடத்தி விடுகின்றனர்.
148 செ.மீ., அகலம் மட்டுமே உள்ள பதினெட்டாம் படியில் ஒரு நிமிடத்திற்கு 80 பக்தர்கள் வீதம் கடத்திவிடும் நடவடிக்கைகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பக்தர்களின் வருகை அதிகரிப்பிற்கு ஏற்ப பக்தர்களுக்கு தேவையான குடிநீர், உணவு, மருத்துவம், சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள், திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு சார்பிலும் அரசு துறைகள் சார்பிலும் முடுக்கி விடப்பட்டுள்ளன.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM