திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நாளை நடக்கிறது. இன்று மாலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த மாதம் 16ம் தேதி மாலை திறக்கப்பட்டது. 41 நாட்கள் நீளும் மண்டல காலம் நவ. 17ம் தேதி தொடங்கியது.
கடந்த இரு வருடங்களாக அமலில் இருந்த கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டதால் இவ்வருடம் சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரித்தது. கடந்த மாதம் சராசரியாக தினமும் 65 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு வந்தனர். இம்மாதம் மேலும் அதிகரித்து தினமும் சராசரியாக 80 ஆயிரம் முதல் 90 ஆயிரம் வரை பக்தர்கள் வருகின்றனர்.
இந்நிலையில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நாளை (27ம் தேதி) நடக்கிறது. நாளை மதியம் 12.30க்கும் 1 மணிக்கும் இடையே மண்டல பூஜை நடைபெறும்.
இதையொட்டி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி இன்று மாலை சன்னிதானத்தை அடையும். தொடர்ந்து ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். நாளை மண்டல பூஜைக்கு பின்னர் இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். மீண்டும் மகரவிளக்கு கால பூஜைகளுக்காக 30ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். பிரசித்தி பெற்ற மகர விளக்கு பூஜை ஜன.14ம் தேதி நடைபெறுகிறது.