புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் கரிக்கலாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் தணிகாசலம் (38). அதே பகுதியில் 4 முனை சந்திப்பில் ஜூஸ் மற்றும் செருப்புக் கடை வைத்துள்ளார். தற்போது புதிதாக சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. பணிகள் மந்தமாக நடப்பதாக தெரிகிறது. இதனிடையே வியாபாரி தணிகாசலம் நேற்று மதியம் திடீரென தனது பைக்கை மெயின்ரோட்டில் நிறுத்தி பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். பைக் தீப்பிடித்து மளமளவென எரிந்ததால், அவ்வழியாக வந்த மக்கள் ஓடினர். மேலும் சாலை பணிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்.
தகவலறிந்த கரிக்கலாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்து தணிகாசலத்திடம் விசாரணை நடத்தினர். சாலை பணிகளில் முறைகேடு நடக்கிறது. இதனால் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையில் தனது பைக் ஓடி வீணாவதை விட கொளுத்தி விடுவதே மேல் எனக்கருதி தீ வைத்ததாக தெரிவித்தார். அவரை சமாதானப்படுத்திய போலீசார், அதிகாரிகளிடம் ஆதாரங்களுடன் முறையிடுமாறு கூறி அவரை அனுப்பி வைத்தனர்.