புதுடில்லி, கொரோனா பரவல் காலத்தில் தமிழகத்தில் 10ம் வகுப்பில் ‘ஆல் பாஸ்’ பெற்ற மாணவர்களுக்கு, ஜே.இ.இ., நுழைவு தேர்வு விண்ணப்பத்தில் மதிப்பெண்களை பதிவு செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. நம் நாட்டில் கொரோனா பரவியபோது, 2020- – 21ம் கல்வி ஆண்டில், தமிழகத்தில் 10ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
கோரிக்கை
‘ஆல் பாஸ்’ என அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது. தேர்ச்சி என்று மட்டும் குறிப்பிட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த மாணவர்கள், நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் 2 படிக்கின்றனர். இவர்களில் சிலர், பிளஸ் 2 முடித்த பின், ஐ.ஐ.டி., -என்.ஐ.டி., போன்ற உயர்கல்வி படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ.இ., நுழைவு தேர்வு எழுத உள்ளனர். இதற்கான விண்ணப்ப பதிவு, 15ல் துவங்கியது.
இதற்கிடையே, இந்த நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது, 10ம் வகுப்பு மதிப்பெண் அல்லது ‘கிரேடு’ என்ற தரநிலையை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என, தேர்வை நடத்தும், என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.
இதில், மற்ற மாநில மாணவர்களுக்கு பிரச்னை இல்லாத நிலையில், தமிழக அரசின் பாடத்திட்டத்தில் ‘ஆல் பாஸ்’ சான்றிதழ் பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண்ணோ, தரநிலையோ இல்லை என்பதால், அவர்களால் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை.
இது குறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கவலை தெரிவித்ததுடன், உரிய நடவடிக்கை எடுக்கும்படி மத்திய – மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து, தமிழக மாணவர்கள், 10ம் வகுப்பு மதிப்பெண்களை பூர்த்தி செய்யாமல், ஜே.இ.இ., தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வசதி வேண்டும் என, தேசிய தேர்வு முகமையிடம், பள்ளிக் கல்வி துறை கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில், தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்ட அறிவிப்பில், நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பத்தில் தமிழக பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு மதிப்பெண்களை குறிப்பிடுவதில் இருந்து விலக்கு அளிப்பதாக தெரிவித்துள்ளது.
தேவை இருக்காது
இது குறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஜே.இ.இ., மெயின் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும்போது, தேர்ச்சி ஆண்டு மற்றும் பள்ளி வாரியம் ஆகியவற்றுக்கான இடங்களில், 2021ம் ஆண்டு 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழக பள்ளி கல்வி வாரியம் என்பதை தேர்வு செய்யும்போது, மதிப்பெண்களை பதிவு செய்யும் இடம் இருக்காது.
எனவே, மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டிய தேவை இருக்காது.
ஏற்கனவே விண்ணப்பத்தை பதிவு செய்த தமிழக பள்ளி கல்வி வாரிய மாணவர்களுக்கும் இது பொருந்தும்.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும்போது ஏதாவது பிரச்னை இருந்தால், 011 –4075 9000 மற்றும் 011 -6922 7700 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது [email protected]. என்ற மின்னஞ்சல்முகவரி வாயிலாக தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்