நாகூர் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்; 2ம் தேதி சந்தன கூடு ஊர்வலம்.! 3ம் தேதி உள்ளூர் விடுமுறை

நாகை: நாகை மாவட்டம் நாகூரில் புகழ்பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறும். இந்தாண்டு 466ம் ஆண்டாக கந்தூரி விழா நேற்றிரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக நாகை மீரா பள்ளிவாசலில் இருந்து மந்திரி கப்பல், செட்டி பல்லக்கு, சின்ன ரதம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பல்லக்குகளில் கொடி ஊர்வலம் புறப்பட்டது. மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட கப்பல்கள் நாகை நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று நாகூர் வந்தடைந்தது.

இதைதொடர்ந்து நாகூர் தர்காவில் உள்ள சாகிபு மினரா, தஞ்சையை ஆட்சி செய்த மாமன்னர் ராஜராஜ சோழன் கட்டி கொடுத்த பெரிய மினரா, தலைமாட்டு மினரா, முதுபக் மினரா, ஒட்டு மினரா என 5 மினாராக்களுக்கு கொடிகள் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் தர்கா பரம்பரை கலிபா துவா ஓதினார். மின்னொளியில் ஜொலித்த தர்காவின் 5 மினராக்களிலும் ஒரே நேரத்தில் கொடியேற்றப்பட்டது.

இதில் தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட  பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம், நாகை நகரில் வரும் 2ம் தேதி இரவு நடக்கிறது. இதைத்தொடர்ந்து நாகூர் பெரிய ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி 3ம் தேதி அதிகாலை நடக்கிறது. சந்தனம் பூசும் நிகழ்ச்சியை முன்னிட்டு 3ம் தேதி நாகை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறையை கலெக்டர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.